குமரி மாவட்ட மீனவ மக்களின் சோகம் மனதை உலுக்குகிறது: ஆளுநர்

"ஒக்கி' புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவக் கிராமங்களில் காணப்படும் சோகம் மனதை உலுக்குகிறது என, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறினார்.
ஒக்கி புயலால் உயிரிழந்த குளச்சல் மீனவர் டேவிட்சன் வீட்டுக்குச் சென்று அவரது மனைவிக்கு ஆறுதல் கூறுகிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
ஒக்கி புயலால் உயிரிழந்த குளச்சல் மீனவர் டேவிட்சன் வீட்டுக்குச் சென்று அவரது மனைவிக்கு ஆறுதல் கூறுகிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

"ஒக்கி' புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவக் கிராமங்களில் காணப்படும் சோகம் மனதை உலுக்குகிறது என, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறினார்.
நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த ஆளுநர், அங்கு பொதுமக்களைச் சந்தித்து, "தூய்மை இந்தியா' திட்டம் குறித்து வலியுறுத்தினார். தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக இரவு கன்னியாகுமரி சென்றடைந்த அவருக்கு மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் வரவேற்பளித்தனர்.
இந்நிலையில், அவர் வியாழக்கிழமை காலை கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். 
பின்னர், கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுடன் ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து, ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட குளச்சல் பகுதிக்கு காரில் சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அங்கு மீனவர்கள், மீனவ அமைப்பினர், குளச்சல் ஆலயப் பங்குப் பேரவை நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார். 
அப்போது, இம்மாவட்டத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் புயலில் சிக்கி மாயமானதாகவும், அவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அப்பகுதி மீனவர்கள் ஆளுநரிடம் வலியுறுத்தினர். அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை ஆளுநர் பெற்றுக்கொண்டார்.
பின்னர், மீனவர்களிடையே அவர் பேசியது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் ஏற்படுத்திய பாதிப்புகளை நேரில் பார்த்தேன். மீனவக் கிராமங்களில் காணப்படும் சோகம் மனதை உலுக்குகிறது. மாயமான மீனவர்களைக் கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு என்னுடன் அதிகாரிகளும் வந்துள்ளனர். அவர்கள் மூலம் கணக்கெடுப்புப் பணி நடத்தப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும். மீனவ அமைப்புகளின் கோரிக்கையை உரியவர்கள் கவனத்துக்கு கொண்டு சென்று தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
இதையடுத்து, சுசீந்திரம் கற்காடு பகுதியில் புயலால் பாதிக்கப்பட்டோரைச் சந்தித்து ஆறுதல் கூறிய ஆளுநர், தோவாளை வட்டம் தடிக்காரன்கோணம், கடுக்கரை, தெரிசனங்கோப்பு பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட ரப்பர், வாழைத் தோட்டங்களையும் பார்வையிட்டார்.
இதைத் தொடர்ந்து, கன்னியாகுமரிக்குத் திரும்பிய அவர், விவேகானந்தர் கேந்திரத்துக்குச் சென்று, கேந்திர நிறுவனர் ஏக்நாத் ரானடே சமாதியில் மலர்தூவி மரியாதை செய்தார். கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் தனிப்படகில் சென்று பார்வையிட்டார். அங்கிருந்து அரசு விருந்தினர் மாளிகை திரும்பிய ஆளுநரிடம் 100 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு அளித்தனர். பின்னர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண், மாவட்ட சுகாதாரம், மீன்வளம், வேளாண் துறை அதிகாரிகளுடன் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பிறகு, ஆளுநரை ஏ. விஜயகுமார் எம்.பி., அரசு வழக்குரைஞர் ஞானசேகர் ஆகியோர் சந்தித்தனர். இதையடுத்து மாலை 5.15 மணிக்கு காரில் மதுரைக்கு புறப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் ஆளுநர் சென்னை சென்றார். ஆளுநரின் வருகையையொட்டி, கன்னியாகுமரியில் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com