குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவியுங்கள்: முதல்வர்

ஒக்கி புயலால் கடும் பாதிப்புக்கு உள்ளான கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவியுங்கள்: முதல்வர்

ஒக்கி புயலால் கடும் பாதிப்புக்கு உள்ளான கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் பழனிசாமி வியாழக்கிழமை இரவு எழுதிய கடித விவரம்:
ஒக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் மிகக் கடுமையான சேதங்களுக்கு ஆளாகியுள்ளது என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள். மீனவர்கள் அதிகளவு வசிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆழ்கடல் மீன்பிடிப்பு மிகையளவு நடைபெறுகிறது. அங்கு, 5 ஆயிரத்து 759 இயந்திரப் படகுகளும் ஆயிரத்து 229 நாட்டுப் படகுகளும் மீன்பிடி தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றன.
அவற்றில், 600 இயந்திரப் படகுகள் மூலமாக, பல நாள்கள் கடலிலேயே தங்கியிருந்து மீன்பிடி செய்யப்படுகிறது. புயல் உருவாவதற்கு முன்பாகவே, மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்குச் சென்ற மீனவர்கள் அங்கேயே தங்கி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த அவர்களுக்கு ஒக்கி புயல் குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை கொண்டு சேர்க்க முடியவில்லை. 
புயலால் பாதித்த மீனவர்களைத் தேடும் பணியில் இந்திய விமானப் படை, கடலோரக் காவல் படை, கடற்படை ஆகியன ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மீனவர்களை தேடும் பணியிலும் மீட்புப் பணியிலும் நமது ராணுவப் படைகள் அளித்த ஆதரவும், சேவையும் மிகவும் பாராட்டத்தக்கது.
பேரிடர் பாதிப்பு மாவட்டம்: தமிழகத்தில் உள்ள முப்படை அதிகாரிகளுடன் நான் ஆலோசனை நடத்தினேன். அப்போது, கடைசி மீனவர் வரை அனைவரும் மீட்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை அவர்களிடம் முன்வைத்தேன். அரபிக்கடல் பகுதி மற்றும் கன்னியாகுமரி, குஜராத், மாலத்தீவுகள் வரையில் மீனவர்களைத் தேடும் பணியில் முப்படையினரும் தொடர்ந்து ஈடுபட வேண்டுமென தாங்கள் ராணுவ அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும்.
கரை ஒதுங்கிய மீனவர்களுக்காக தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் அளித்துள்ளன. இதற்காக, அந்த மாநிலங்களுக்கு தமிழக அரசின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்சாரக் கட்டமைப்புகள், தோட்டக்கலை, பணப் பயிர்கள் உள்ளிட்ட விவசாயம், சாலைகள், மீனவர்களின் உட்கட்டமைப்பு வசதிகள், குடிநீர் வசதி என பலவும் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. எனவே, ஒக்கி புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
மேலும், கடுமையான பாதிப்புக்கு உள்ளான மாவட்டத்தில் மீட்பு-நிவாரணப் பணிகளை மேற்கொள்ள போதிய நிதி உதவிகளையும் அளிக்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்புவதற்குத் தேவையான அத்தனை உடனடி நடவடிக்கைகளையும் தமிழக அரசு முழுவீச்சில் மேற்கொண்டுள்ளது. பாதிப்பு தொடர்பான விரிவான அறிக்கையையும் தயார் செய்து வருகிறது. இதுதொடர்பான விரிவான கோரிக்கை மனு மத்திய அரசிடம் அளிக்கப்படும். இந்த இக்கட்டான தருணத்தில் தங்களது உடனடி உதவி எங்களுக்கு மிகவும் அவசியமாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com