ஜெயலலிதா கைரேகை தொடர்பான வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை! 

திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் தொடர்ந்த வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கைரேகை தொடர்பான உயர் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஜெயலலிதா கைரேகை தொடர்பான வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை! 

புதுதில்லி: திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் தொடர்ந்த வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கைரேகை தொடர்பான உயர் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதைச் செல்லாது என அறிவிக்கக் கோரி ,திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

ஜெயலலிதா சுய நினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அதிமுக வேட்பாளராக ஏ.கே.போஸையும் அவருக்கு இரட்டைஇலை சின்னத்தையும் ஒதுக்கக் கோரி தனது இடதுகை பெருவிரல் ரேகையை தேர்தல் ஆவணப் படிவத்தில் பதிவு செய்து கொடுத்துள்ளார். இந்தப் படிவத்தில் சுய நினைவோடுதான் அவர் கைரேகையைப் பதிவு செய்தாரா என்பது சந்தேகமாக உள்ளதாக கேள்விகள் எழுப்பப்பட்டன.

எனவே இது தொடர்பாக உரிய மருத்துவ ஆவணங்களைச் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என கூடுதல் மனுவையும் டாக்டர் சரவணன் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி , இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைச் செயலாளர் வில்ஃபிரட், அரசு மருத்துவர் பாலாஜி ஆகியோர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்திருந்தனர். 

இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் வெள்ளிக்கிழமை (நவ.24) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த வழக்கில் ஜெயலலிதாவின் கைரேகைதான் சர்ச்சையாக உள்ளது. அவர் சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பொழுது பெறப்பட்ட கைரேகைகள் உள்ளிட்ட அனைத்து அசல் ஆவணங்களையும் கர்நாடக மாநில பரப்பன அக்ராஹாரா சிறைக் கண்காணிப்பாளர் நேரில் ஆஜராகி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

அத்துடன் ஜெயலலிதாவுக்கு ஆதார் அட்டை உள்ளதா என்பது தொடர்பாக அது தொடர்பான கைரேகை உள்ளிட்ட ஆவணங்களை தாக்கல் செய்ய ஆதார் ஆணையத்துக்கும் நீதிபதி உத்தரவிட்டு  இந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதன்படி பெங்களூரு பரப்பன அக்ராஹாரா சிறைக் கண்காணிப்பாளர் மோகன் ராஜ் இன்று உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்பொழுது அவர் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட பொழுது அவரிடம் இருந்து கைரேகைகள் பெறபபடவில்லை என்று தெரிவித்தார்.

அதே சமயம் ஜெயலலிதா கைரேகை தொடர்பான அறிக்கையினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தடை விதிக்கக் கோரி, திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏவான் ஏ.கே.போஸ் உச்ச்ச நீதின்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா கைரேகை தொடர்பான அறிக்கையினை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தடை விதித்ததுடன், குறிப்பிட்ட வழக்கு விசாரணைக்கும் தடை விதித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com