தேர்தலை நிறுத்த சதி: மு.க.ஸ்டாலின்

திமுக வெற்றிபெறும் என்பதால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நிறுத்துவதற்கு சதி நடப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
தேர்தலை நிறுத்த சதி: மு.க.ஸ்டாலின்

திமுக வெற்றிபெறும் என்பதால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நிறுத்துவதற்கு சதி நடப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
கொளத்தூர் தொகுதியில் பல்வேறு இடங்களில் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள், நூலகத்துக்கு மடிக்கணினி உள்ளிட்டவற்றை வழங்கி செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முறையாக நடத்துவோம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அப்படி நடந்தால் நிச்சயம் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஆனால், நடிகர் விஷால் குறித்து தில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்தால்தான் இந்த தேர்தல் முறையாக நடைபெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கும் மக்களுக்கும் ஏற்படும். 
ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்துவதற்கான சதி நடப்பதாக திருமாவளவன் கூறியிருப்பது உண்மைதான். 
கடந்த முறை திமுக வெற்றி பெறப் போகிறது என்பதால்தான் ரூ.89 கோடி விவகாரத்தை அடிப்படையாக வைத்து தேர்தலை நிறுத்தினார்கள். இப்போதும் அதுபோல செய்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஆளுநருக்கு எதிராகப் போராட்டம்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்கெனவே கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் ஒரு முதல்வரைப் போல பெரிய சுற்றுப்பயணத்தையே நடத்தி, ஆய்வுப் பணிகளைச் செய்தார். இப்போது திருநெல்வேலியில் ஆய்வு நடத்தியுள்ளார். கன்னியாகுமரிக்கும் செல்லவிருப்பதாகச் செய்திகள் வருகின்றன. 
அரசியல் சட்ட விதிகளின்படி பார்த்தால் ஆய்வு நடத்துவதற்கோ அல்லது மாவட்ட வாரியாகச் சென்று மக்கள் பணிகளைக் கவனிப்பதற்கோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.
ஆனால், ஆட்சியில் உள்ளோர் இதுபற்றி எதுவும் கவலைப்படவில்லை. தற்போது நடைபெறுவது ஒரு ஆட்சியே இல்லை என்று ஆளுநர் முடிவு செய்து ஆய்வுப் பணியில் இறங்கியிருக்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.
ஆய்வுப் பணியில் ஈடுபடும் ஆளுநர் தற்போதைய ஆட்சியை பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிட்டால் பாராட்டுவேன். அதைவிட்டு, தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டால், அவர் ஆய்வு மேற்கொள்ளும் மாவட்டங்களில் திமுக சார்பில் அறவழியில் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்படும்.
மீனவர்கள் மீட்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் தாக்கி 10 நாள்கள் ஆகிவிட்டன. இதுவரை காணாமல் போனவர்கள் குறித்து அரசு கணக்கெடுப்பு எதுவும் நடத்தவில்லை. மீன்வளத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், துணை முதல்வர், முதல்வர், பாதுகாப்புத் துறை அமைச்சர் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு கணக்குச் சொல்கின்றனர். ஆனால், முறையான கணக்கு எடுக்க அவர்களால் முடியவில்லை. ஏன், முடியவில்லை என்பது எனக்குத் தெரியவில்லை என்றார்.
அன்பழகனுடன் சந்திப்பு: கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் தோட்ட இல்லத்தில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனை மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை சந்தித்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com