விஷால் வேட்புமனு: தேர்தல் நடத்தும் அதிகாரிக்கே அதிகாரம்: ராஜேஷ் லக்கானி

வேட்புமனுவை ஏற்கும், நிராகரிக்கும் அதிகாரம், சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியையே சாரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி விளக்கம் அளித்தார்.
விஷால் வேட்புமனு: தேர்தல் நடத்தும் அதிகாரிக்கே அதிகாரம்: ராஜேஷ் லக்கானி

வேட்புமனுவை ஏற்கும், நிராகரிக்கும் அதிகாரம், சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியையே சாரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி விளக்கம் அளித்தார்.
தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:
விஷால் மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக எந்த அறிக்கையையும் என்னிடம் தேர்தல் கமிஷன் கேட்கவில்லை. ஆனால், விஷாலுக்கு பதிலளித்து தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், 
"மனுக்கள் பரிசீலனையின் போது ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி, நீதிபதிக்கு இணையான நடவடிக்கையைத்தான் மேற்கொண்டுள்ளார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் 36-ஆவது பிரிவின் கீழ், வேட்பு மனு விஷயங்களில் முடிவெடுக்கும் அதிகாரம், தொகுதி தேர்தல் அதிகாரிக்கே உள்ளது. எனவே அவரிடமே நீங்கள் உங்கள் கோரிக்கையை முன்வைத்து, எது உண்மையோ அதைத் தெரிவிக்கலாம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டப்படி ஒரு மனுவை நிராகரிக்கும் போது, என்ன காரணத்துக்காக அந்த மனு நிராகரிக்கப்பட்டது என்பதை வேட்பாளருக்கு, தேர்தல் அதிகாரி உத்தரவாகத்தான் வழங்க வேண்டும். வாய்மொழியாக கூறக்கூடாது. அதை ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் அதிகாரி முதலில் பின்பற்றவில்லை. அதன் பிறகு நிராகரிக்கப்பட்ட மனு ஏற்கப்பட்டதாகவும் வாய்மொழியாகக் கூறியுள்ளார். இறுதியில்தான் அவரது மனு நிராகரிக்கப்பட்டதற்கான விளக்கத்தை எழுத்துப்பூர்வமாகக் கூறியுள்ளார்.
தேர்தல் அதிகாரியின் இந்த தவறு குறித்தும், மனுக்கள் பரிசீலனை நடைபெறும் போது தேர்தல் பார்வையாளர்கள் இல்லாதது குறித்தும் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வேட்பு மனு விவகாரத்தில் தேர்தல் அதிகாரியின் முடிவே இறுதியானது. பரிசீலித்து முடிவெடுக்கும் அதிகாரமும் அவருக்கு மட்டுமே உண்டு. ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் அதிகாரியை மாற்றும் முடிவு, தேர்தல் ஆணையத்திடம்தான் உள்ளது. 
டாஸ்மாக் கடைகள் மூடல்: வாக்கு எண்ணிக்கை தினமான வரும் 24-ஆம் தேதி ஆர்.கே. நகர் தொகுதிக்கு மட்டும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடுவதா அல்லது சென்னை மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூடுவதா என்பது குறித்து டாஸ்மாக் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com