ரத்தாகிறது ஆர்கே நகர் தேர்தல்? அதிமுக ஆட்சிக்கு ஆபத்து? பரபரப்புத் திரி கிள்ளும் எஸ்.வி. சேகர்! 

மீண்டும் தொடரும் பணப்பட்டுவாடாவினால் ஆர்கே நகர் தேர்தல் ரத்தாக வாய்ப்பு உள்ளது; மோசமான சட்டம் ஒழுங்கு சூழலின் காரணமாக அதிமுக ஆட்சி டிஸ்மிஸ் ஆகலாம் என்னும் பொருள் தொனிக்கும் வகையில் ...
ரத்தாகிறது ஆர்கே நகர் தேர்தல்? அதிமுக ஆட்சிக்கு ஆபத்து? பரபரப்புத் திரி கிள்ளும் எஸ்.வி. சேகர்! 

சென்னை: மீண்டும் தொடரும் பணப்பட்டுவாடாவினால் ஆர்கே நகர் தேர்தல் ரத்தாக வாய்ப்பு உள்ளது; மோசமான சட்டம் ஒழுங்கு சூழலின் காரணமாக அதிமுக ஆட்சி டிஸ்மிஸ் ஆகலாம் என்னும் பொருள் தொனிக்கும் வகையில் நடிகரும், பாரதிய ஜனதா கட்சிப் பிரமுகருமான எஸ்.வி. சேகர் டிவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.   

தமிழக அரசியல் சூழல் குறித்ததும் இங்குள்ள ஆட்சி செயல்பாடுகள் குறித்தும் தமிழக பாஜக பிரமுகர்கள் அவ்வப்பொழுது ஆருடங்களை வெளியிடுவது வழக்கமான ஒன்று. சமயங்களில் அவை மத்திய அரசின் மனப்போக்கினை வெளிப்படுத்துவதாகக் கூட அமையும்.   

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் இப்படி ஏதாவது கருத்துக்களை வெளியிட்டு வருவார்கள். அந்த வரிசையில் நடிகரும், பாரதிய ஜனதா கட்சிப் பிரமுகருமான எஸ்.வி. சேகர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஆர்.கே.நகர்  சட்டசபை தொகுதிக்கான இடைத் தேர்தல் தொடர்பாக தொடர்ச்சியாக பல கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.

அந்த வரிசையில் அவர் சனிக்கிழமை அன்று டிவிட்டரில் பதிவிட்டிருந்த கருத்து பலரையும் சிந்திக்க வைத்துள்ளது. அதில் அவர் "விரைவில் அறிவிப்பு எதிர்பார்க்கலாம். "பணப்பட்டுவாடாவை தடுக்க முடியாததால் ஆர் கே நகர் தேர்தல் இரண்டாம் முறையாக ரத்து செய்யப்படுகிறது." 2 முறை தொடர்ந்து தேர்தல் நடத்த முடியாத சட்டம் ஒழுங்கு கெட்ட சூழலில் தமிழக அரசு...." என்று குறிப்பிட்டிருந்தார். அத்துடன் ஒரு சங்கு படத்தையும் அவர் இணைத்துள்ளார்.

ஏற்கனவே அதிக அளவு பணப்பட்டுவாடா புகார்களின் காரணமாக ஆர்கே நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்பொழுது பாஜக பிரமுகரான எஸ்.வி.சேகரின் டிவிட்டர் பதிவு அரசியல் வட்டாரங்களில் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com