ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: பிரவீண் நாயர் பொறுப்பேற்பு

சென்னை, ஆர்.கே. நகர் இடைத் தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தும் அதிகாரியாக பிரவீண் நாயர் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார்.

சென்னை, ஆர்.கே. நகர் இடைத் தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தும் அதிகாரியாக பிரவீண் நாயர் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார்.
ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் கடந்த நவ.27-ஆம் தேதி தொடங்கியது. தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஆதிதிராவிடர் நலத்துறை இணை இயக்குநர் கே.வேலுச்சாமி நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் வேட்புமனு பரிசீலனையின்போது பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. நடிகர் விஷாலின் வேட்புமனு முதலில் நிராகரிக்கப்பட்டது. பின்னர் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இறுதியாக இரவில் அவரது மனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதேபோல் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதுபோன்று பல்வேறு பிரச்னைகளில் வேலுச்சாமி மீது தொடர் புகார்கள் எழுப்பப்பட்டன. அதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அதிகாரியான வேலுச்சாமி மாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதில் பிரவீண் நாயர் சனிக்கிழமை தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டார்.
பொறுப்பேற்ற பிரவீண் நாயர்: இதையடுத்து பிரவீண் நாயர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்துக்கு வந்து தேர்தல் நடத்தும் அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த மார்ச் மாதம் ஆர்.கே. நகருக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் பத்மஜாதேவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஆனால் அடுத்த சில தினங்களில் அவர் மாற்றப்பட்டு பிரவீண் நாயர் நியமிக்கப்பட்டார்.
ஏற்கெனவே இத்தொகுதியில் உள்ள அனைத்து நிலவரங்களையும் பிரவீண் நாயர் நன்கு அறிந்தவர் என்பதால் தேர்தல் பணிகளை அவர் சுலபமாக மேற்கொள்ள முடியும் என்பதால் அவரை தேர்தல் ஆணையம் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com