ஒக்கி புயலில் 5,000 தேனீ கூடுகள் சேதம்

குமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் சுமார் 5 ஆயிரம் தேனீ கூடுகள் அழிந்ததால், தேன் உற்பத்தியாளர்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
பொன்மனை அருகே பெரவூர் பகுதியில் ரப்பர் தோட்டம் ஒன்றில் சேதமடைந்து கிடக்கும் தேனீ கூடுகள்.
பொன்மனை அருகே பெரவூர் பகுதியில் ரப்பர் தோட்டம் ஒன்றில் சேதமடைந்து கிடக்கும் தேனீ கூடுகள்.

குமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் சுமார் 5 ஆயிரம் தேனீ கூடுகள் அழிந்ததால், தேன் உற்பத்தியாளர்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேனீ வளர்ப்பும், தேன் உற்பத்தியும் பிரதான தொழிலாகும். இந்தியாவின் தேன் கிண்ணம் என, குமரி மாவட்டத்தின் மார்த்தாண்டம் வர்ணிக்கப்படுகிறது. மார்த்தாண்டத்தை மையமாகக் கொண்டு ஆயிரக்கணக்கான தேனீ வளர்ப்போர் உள்ளனர். இவர்கள் தொழில் முறையில் ரப்பர் தோட்டங்களில் கூடுகளை வைத்து அவற்றில் தேனீக்களை வளர்த்து தேன் உற்பத்தி செய்கின்றனர். மார்த்தாண்டம், அருமனை, காரோடு, குலசேகரம், களியல், ஆலஞ்சோலை, ஆறுகாணி, பேச்சிப்பாறை, சேக்கல், பிணந்தோடு, திற்பரப்பு, பொன்மனை, சுருளகோடு, தடிக்காரன்கோணம், முட்டைக்காடு, கொற்றியோடு என பல்வேறு இடங்களில் ரப்பர் தோட்டங்களில் தேனீ கூடுகளை வைத்துள்ளனர். கடந்த 30 ஆம் தேதி வீசிய ஒக்கி புயலில் மாவட்டத்தில் லட்சக்கணக்கான ரப்பர் மரங்கள் சாய்ந்தன. இதனால் ரப்பர் தோட்டங்களில் வைக்கப்பட்டிருந்த தேனீ கூடுகளும் உடைந்து சேதமாகியுள்ளன. ஏறக்குறைய 5 ஆயிரம் கூடுகள் வரை சேதமடைந்துள்ளதாக தேனீ வளர்ப்போர் கூறுகின்றனர்.
இது குறித்து பொன்மனை பெரவூர் பகுதியில் ரப்பர் தோட்டம் ஒன்றில் தேனீ கூடுகளை வைத்திருக்கும் குலசேகரம் கொச்சுவீட்டுப்பாறை பகுதியைச் சேர்ந்த தோமஸ் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் வீசிய ஒக்கி புயல், தேனீ வளர்ப்போரையும் விட்டு வைக்கவில்லை. ரப்பர் தோட்டங்களில் வைக்கப்பட்டிருந்த தேனீ கூடுகள் அனைத்தும் சாய்ந்த மரங்களுக்கு அடியில் சிக்கி சிதைந்துள்ளன. ஒரு தேனீ கூடு ஈக்கள் குடும்பத்துடன் அமைப்பதற்கு ரூ. 1,000 முதல் ரூ. 1,500 வரை வரை செலவாகும். வரும் ஜனவரி மாதம் தேன் உற்பத்தி தொடங்கும் நிலையில், அனைத்தையும் நாசம் செய்துள்ளது புயல் என்றார்.
இது குறித்து முன்னோடி தேன் உற்பத்தியாளரும், தேனீ வளர்ப்பு பயிற்சியாளருமான கொட்டூர் பி. ஹென்றி கூறியதாவது: ஒக்கிப் புயலால் குமரி மாவட்டத்தில் 5 ஆயிரம் தேனீ கூடுகள் சேதமடைந்துள்ளன. இது தேனீ வளர்ப்போருக்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com