பணப்பட்டுவாடா: வேட்பாளர்களை தண்டிக்க விரைவுச் சட்டம்: கிருஷ்ணமூர்த்தி

தேர்தலின்போது வாக்குக்காக பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளர்களைத் தண்டிக்க விரைவுச் சட்டம் இயற்றப்படவேண்டும் என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி யோசனை தெரிவித்துள்ளார். 
பணப்பட்டுவாடா: வேட்பாளர்களை தண்டிக்க விரைவுச் சட்டம்: கிருஷ்ணமூர்த்தி

தேர்தலின்போது வாக்குக்காக பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளர்களைத் தண்டிக்க விரைவுச் சட்டம் இயற்றப்படவேண்டும் என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி யோசனை தெரிவித்துள்ளார். 
திருவள்ளூர் மாவட்டம், கசுவா கிராமத்தில் உள்ள சேவாலயா அறக்கட்டளை சார்பில் ராஜாஜி பிறந்த தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பணப்பட்டுவாடா செய்யவிடாமல் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற வேட்பாளர்களைத் தண்டிக்க தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை மாற்றி அமைத்து, விரைவுச் சட்டம் உருவாக்கப்படவேண்டும். அதன்மூலம் 5 முதல் 10 ஆண்டுகள் வரை அவர்கள் தேர்தலில் நிற்கத் தடைவிதிக்க வேண்டும்.
இனிமேல் அரசியல் கட்சிகள் தனியார் அமைப்புகளிடம் நன்கொடையாக நிதி வாங்க அனுமதிக்கக் கூடாது. அதேநேரத்தில் தேசிய பொது நிதி ஏற்படுத்தி பொதுமக்களிடம் இருந்து நன்கொடை பெறவேண்டும். அந்த நிதியிலிருந்து வேட்பாளர்கள் செலவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். 
இவ்வாறு செய்வதால், சாதாரண நபர் கூட தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியும் என்ற நிலை உருவாகும். ஆனால், தற்போது இதற்கு மாறாக அரசியல் கட்சிகள் பணம் இருந்தால்தான் தேர்தலில் நிற்க முடியும் என்கிற நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஒவ்வொரு அரசியல் கட்சியும் அடிப்படை அமைப்பில் இருந்து கட்டுக்கோப்பாக இயங்கும் வகையில் கடினமான சட்ட விதிமுறைகள் மற்றும் துணை விதிகளை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் கட்சிக்குள் உள்பூசல் ஏற்படும் போது எளிதாக சமாளிக்க முடியும். 
அதேபோல், காலாண்டுக்கு ஒருமுறை ஒவ்வொரு அரசியல் கட்சியும் வரவு, செலவுக் கணக்கை தணிக்கை செய்து வெளியிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், குற்றப்பின்னணி உடையவர்களை வேட்பாளர்களாக அரசியல் கட்சிகள் நிறுத்தக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com