வேளாண் துறைக்கான அங்கீகாரம் குறைந்து வருகிறது: வெங்கய்ய நாயுடு கவலை

கடந்த சில ஆண்டுகளாகவே வேளாண் துறைக்கான அங்கீகாரம் வெகுவாக குறைந்து வருகிறது என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கவலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற விழாவில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு 'ஏர் அறிஞர்' விருது வழங்குகிறார் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு. உடன் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன், ஆளுநர
சென்னையில் நடைபெற்ற விழாவில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு 'ஏர் அறிஞர்' விருது வழங்குகிறார் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு. உடன் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன், ஆளுநர

கடந்த சில ஆண்டுகளாகவே வேளாண் துறைக்கான அங்கீகாரம் வெகுவாக குறைந்து வருகிறது என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கவலை தெரிவித்துள்ளார்.
புதுதில்லி வேளாண் அறிவியல் தமிழ் சமுதாயம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு மீன்வளப்பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு "ஏரறிஞர்' என்ற பட்டம் வழங்கும் விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் குடியரசுத்துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பங்கேற்று, எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பட்டத்தை வழங்கினார்.
பின்னர், குடியரசுத் துணைத் தலைவர் பேசியது:
உணவுப் பொருள்களை இந்தியா இறக்குமதி செய்த நிலை மாறி, உணவுப் பாதுகாப்பு மட்டுமின்றி வேளாண் உற்பத்தி பொருள்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையை உருவாக்கியவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன். நெல், கோதுமை விளைச்சலிலும் இந்தியாவை தன்னிறைவு பெறவைத்தார்.
இப்படிப்பட்ட பெரும் சாதனைகளைப் புரிந்த அவருக்கு விருதை வழங்குவதில் பெருமை கொள்கிறேன்.
விவசாயம்தான் இந்தியாவின் அடிப்படை கலாசாரம். எனவே, எம்.எஸ்.சுவாமிநாதனின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, இந்திய வேளாண் துறையையும், வேளாண் கட்டமைப்பு வசதிகளையும் எவ்வாறு மேலும் மேம்படுத்துவது என்பது குறித்த ஆராய்ச்சியில் பல்கலைக்கழகங்களும், விஞ்ஞானிகளும் ஈடுபட வேண்டும். 
கடந்த சில ஆண்டுகளாகவே, வேளாண் துறைக்கான அங்கீகாரம் வெகுவாகக் குறைந்து வருகிறது. இதன் காரணமாக விவசாயிகள் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர்.
ஒரு மருத்துவர் தனது மகனை மருத்துவராக்கவும், ஆசிரியர் தனது மகனை ஆசிரியராக்கவும், ஒரு தொழிலதிபர் தனது மகனை ஒரு தொழில் முனைவோராக ஆக்கவும் விரும்புகின்ற இன்றையச் சூழலில், ஒரு விவசாயி மட்டும் தனது மகனை விவசாயத் தொழிலில் ஈடுபடுத்த விரும்புவதில்லை. 
இதற்கு, மாறுபட்ட பருவநிலை, சந்தை நிலவரம் ஆகியவையே முக்கியக் காரணங்கள். இதுபோன்ற தகவல்களை சரியான நேரத்தில் விவசாயிகளுக்கு அளித்து, அவர்கள் பெரும் பாதிப்பிலிருந்து மீள வழி வகுக்க வேண்டும்.
ஆனால், அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் இதுபோன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. அரசியல் கட்சிகள் எந்தவொரு விஷயத்தையும் அரசியலாக்கப் பார்க்கின்றனர். ஒரு பிரச்னை அரசியலாக்கப்படும்போது, அந்தப் பிரச்னை தனது முக்கியத்துவத்தை இழந்து விடும் என்பது இயல்பு.
அதுபோல, ஊடகங்கள், எப்போதும் பரபரப்பான செய்திகளுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றன. இதே நிலை நீடித்தால் விவசாயம் கடும் பாதிப்பைச் சந்திக்க நேரிடும்.
எனவே, விஞ்ஞானிகள், அரசியல் கட்சிகள், ஊடகங்கள் என அனைத்து தரப்பினரும் வேளாண் துறை மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார் அவர்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழ் வளர்ச்சி மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் பாண்டியராஜன், வேளாண் துறை அமைச்சர் துரைகண்ணு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக 
துணைவேந்தர் ராமசாமி, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் திலகர், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.பெலிக்ஸ், புதுதில்லி வேளாண் அறிவியல் தமிழ் சமுதாய நிறுவனத்தலைவர் முத்தமிழ்ச் செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com