ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: ராஜேஷ் லக்கானியிடம் தமிழிசை, தினகரன் புகார்

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தொடர்பாக, தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், அத்தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் டிடிவி
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: ராஜேஷ் லக்கானியிடம் தமிழிசை, தினகரன் புகார்

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தொடர்பாக, தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், அத்தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனி புகார் மனு அளித்துள்ளனர்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அந்தக் கட்சியின் ஆர்.கே. நகர் வேட்பாளர் கரு.நாகராஜன் ஆகியோர் தலைமைச் செயலகத்துக்கு திங்கள்கிழமை சென்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து புகார் மனு அளித்தனர். இதையடுத்து நிருபர்களிடம் தமிழிசை செளந்தரராஜன் கூறியது:
ஆர்.கே.நகர் தொகுதியில் மிக அதிகளவு பண நடமாட்டம் உள்ளது. வீட்டுக்கு வீடு வாக்குக் கேட்பதற்கு பதிலாக, நோட்டுகளைக் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. பாஜகவினர் நேரடியாக களத்தில் இருக்கும் போது, பிற கட்சியினர் செய்த பல முறைகேடுகளை படமாக எடுத்து தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளோம்.
நேர்மையாக நடத்துங்கள்: இடைத் தேர்தலை நேர்மையாக நடத்த முடிந்தால் நடத்த வேண்டும். முடியாவிட்டால் தேர்தல் நடத்துவதில் எந்தப் பயனும் இல்லை. இதுகுறித்து, தேர்தல் ஆணையரிடம் முழுமையாக கோரிக்கை வைத்துள்ளோம். தேர்தலில் முறைகேடுகளை எதிர்ப்பதற்காகவே நாங்கள் களத்தில் நிற்கிறோம். தேர்தலில் முறைகேடுகள் நடைபெறும் போது அதை புகார்களாகத் தெரிவிக்கிறோம். இந்தப் புகார்களின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நேர்மையாகத் தேர்தல் நடைபெற வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப் பேரவை உறுப்பினர், நியாயமாகத் தேர்வு செய்யப்பட்டவராக இருக்க வேண்டும் என்றார் தமிழிசை சௌந்தரராஜன்.
டிடிவி தினகரன் புகார் மனு: இந்நிலையில், ஆர்.கே.நகரில் சுயேச்சையாகப் போட்டியிடும் டிடிவி தினகரனும் திங்கள்கிழமை தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியைச் சந்தித்து மனு அளித்தார். இதைத் தொடர்ந்து, நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் சரியாக நடக்கவே விரும்புகிறோம். எங்களது நிர்வாகிகள், ஆர்.கே.நகரைச் சேர்ந்த கட்சிப் பிரதிநிதிகள் ஆகியோரை கைது செய்வதுடன், தீவிரவாதிகளைப் பிடிப்பது போன்று பிடிக்கின்றனர்.
நள்ளிரவு 1.30 மணிக்கு கைது செய்து, தொடர்பே இல்லாமல் வேறொரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கின்றனர். காவல்துறையினர் நடுநிலையுடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், நீதிமன்றத்தை நாடுவோம். தோல்வி பயத்தில் உள்ள அதிமுகவினரே இதைச் செய்கின்றனர். 
சாதாரண உடையில் 500 பேர்: ஆர்.கே.நகர் தொகுதிக்குள் 500 போலீஸாரை சாதாரண சீருடையில் களத்தில் இறக்கியுள்ளனர். போலீஸாரை கொண்டு எங்கள் ஆள்களை மிரட்டி, அதிமுகவுக்காக பிரசாரம் செய்வதற்கு முயற்சிக்கிறார்கள். காவல் துறை அனைவரையும் மிரட்டுகிறது. இதற்கு நீதிமன்றம் மூலமாகத் தீர்வு காண்போம். 
எங்கள் கட்சியினரின் தன்மானம் எனக்கு முக்கியம். கட்சியினரை வீடு புகுந்து கைது செய்கிறார்கள். அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு வைப்புத் தொகை போய் விடும் என்ற அச்சத்தில், வாக்குகளைப் பெறும் நோக்கில் போலி வாக்குறுதிகள் தருகிறார்கள். அதேசமயம், எங்கள் மீது தவறு இருந்தால் ஊடகங்கள் செய்திகளை வெளியிடுங்கள். இதன்மூலம், உண்மை வெளியாகும். நடுநிலை தவறிச் செயல்படும் அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் மனு அளித்துள்ளோம் என்றார் டிடிவி தினகரன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com