ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ஒத்திவைத்தால் மக்கள் நம்பிக்கை இழப்பர்: இல.கணேசன்

சென்னை ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் மீண்டும் ஒரு முறை ஒத்திவைக்கப்பட்டால், ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவர் என்று மாநிலங்களவை பாஜக உறுப்பினர்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ஒத்திவைத்தால் மக்கள் நம்பிக்கை இழப்பர்: இல.கணேசன்

சென்னை ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் மீண்டும் ஒரு முறை ஒத்திவைக்கப்பட்டால், ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவர் என்று மாநிலங்களவை பாஜக உறுப்பினர் இல. கணேசன் தில்லியில் திங்கள்கிழமை தெரிவித்தார்.
சென்னை ஆர்.கே. நகர் சட்டப்பேரவையிலிருந்து உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததைத் தொடர்ந்து, அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. 
ஏற்கெனவே, சில மாதங்களுக்கு முன் இடைத் தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு பணப்பட்டுவாடா புகார் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. 
பின்னர், அத்தொகுதிக்கு மீண்டும் இடைத் தேர்தல் டிசம்பர் 21-ஆம் தேதி நடத்தப்படும் என்று சில தினங்களுக்கு முன் தேர்தல் ஆணையம் அறிவித்தது. 
அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், தில்லி வந்திருந்த மாநிலங்களவை பாஜக உறுப்பினர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆர்.கே. நகர் சட்டப்பேரவை இடைத் தேர்தலை இன்னொரு முறை ரத்துச் செய்வதில் பா.ஜ.க.விற்கு உடன்பாடு இல்லை. தோல்வி பயத்தால் சிலர் தேர்தலை ரத்து செய்வதற்கான காரணங்களை உருவாக்க முயற்சிக்கின்றனர். 
தேர்தலை ஒத்திவைத்தால், சாதாரண மக்களுக்கு தண்டனை வழங்குவது போல் ஆகிவிடும். ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபடுவோரை கண்டறிந்து அவர்கள் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ஆனால், தேர்தலை நிறுத்துவது அதற்கான வழியாக அமையாது. தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். ஆனால், இன்னொரு முறை தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டால், ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவர். தேசிய அளவிலான எங்களின் செயல்பாடுகளைக் கூறி ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வாக்கு கேட்போம். 
ஒக்கி புயல் ஒரு விபத்து: ஒக்கி புயலில் சிக்கிய தமிழக மீனவர்கள் பலர் காற்றின் சீற்றத்தால் சிதறடிக்கப்பட்டு வேறு இடங்களில் கரை ஒதுங்கியுள்ளனர். அவர்களை முழு மூச்சுடன் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் களத்தில் இறங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். காணாமல் போன மீனவர்கள் அனைவரும் விரைவில் மீட்கப்படுவர். 
இந்த விவகராத்தில் அரசுக்கு எதிராக நடத்தப்படும் ஆர்பாட்டங்களின் பின்னணியில் அரசியல் நோக்கங்கள் உள்ளன என்றார் அவர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com