இரவிபுத்தன்துறையில் தர்னாவில் ஈடுபட்ட மீனவர்கள். 
இரவிபுத்தன்துறையில் தர்னாவில் ஈடுபட்ட மீனவர்கள். 

இரவிபுத்தன்துறை, மார்த்தாண்டன்துறையில் 8 கிராம மீனவர்கள் தர்னா: 4 ஆயிரம் பேர் பங்கேற்பு

புயலில் சிக்கி கடலில் மாயமான மீனவர்களை மீட்க வலியுறுத்து இரவிபுத்தன்துறை, மார்த்தாண்டன்துறையில் 8 கிராம மீனவர்கள் கண்ணில் கருப்புத் துணி கட்டி திங்கள்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.

புயலில் சிக்கி கடலில் மாயமான மீனவர்களை மீட்க வலியுறுத்து இரவிபுத்தன்துறை, மார்த்தாண்டன்துறையில் 8 கிராம மீனவர்கள் கண்ணில் கருப்புத் துணி கட்டி திங்கள்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர். இரு போராட்டங்களிலும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஒக்கி புயலில் சிக்கி கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூர் கடலோர மண்டலத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மாயமாகினர். இதில் பலர் மீட்கப்பட்ட நிலையில், 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இவர்களை மீட்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மீனவர்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். 
கடலில் மாயமான மீனவர்களை மீட்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு கேரள அரசு வழங்குவது போன்று தமிழக அரசும் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்த நிலையில், இரவிபுத்தன்துறை, சின்னத்துறை, தூத்தூர், பூத்துறை, இரயுமன்துறை மீனவர்கள் இரவிபுத்தன்துறையிலும், வள்ளவிளை, மார்த்தாண்டன்துறை, நீரோடி மீனவர்கள் மார்த்தாண்டன்துறையிலும் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரவிபுத்தன்துறையில் நடந்த போராட்டத்தில் மீனவர்களுடன் பங்குத்தந்தையர்கள் மல்பின்சூசை, ஆன்றோ ஜோரிஸ், பெபின்சன், ஷாபின், அரிஸ்டோ மற்றும் கலிங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்த இந்து சமுதாயத்த்தைச் சேர்ந்த அனீஷ் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். 
மேலும், பூத்துறை முஸ்லிம் ஜமா அத் சார்பில் அதன் தலைவர் காசீம், துணைத் தலைவர் யு. அமீன், செயலர் பீர்முகமது, துணைச் செயலர் அபுபக்கர், செயற்குழு உறுப்பினர் சாகுல்அமீது உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் இப் போராட்டத்தில் பங்கேற்று, மத நல்லிணக்க போராட்டமாக இப் போராட்டத்தை நடத்தினர். 
மார்த்தாண்டன்துறையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்குத் தந்தையர்கள் டார்பின், போஸ்கோ, லூசியான் மற்றும் அருட்சகோதரிகள், பங்குப் பேரவை நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மீனவர்களும் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு மதியம் அந்தந்த பகுதியில் கஞ்சி தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
மீனவர்கள் போராட்டம் அறவழியில் தொடர வேண்டும்
இரவிபுத்தன்துறையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவரும், ஐ.நா. சர்வதேச இளைஞர் கவுன்சில் பிரதிநிதியுமான பி. ஜஸ்டின் ஆன்றணி பேசியதாவது:
ஒக்கி புயலில் சிக்கி கடலில் மாயமான மீனவர்களை மீட்கும் பணியை அரசு துரிதப்படுத்துவதுடன், மாயமான மீனவர்களை இந்தியக் கடல் எல்லைக்குள் மட்டும் தேடாமல் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஓமன் நாட்டு கடல் பகுதியிலும் தேட வேண்டும். தேடும்பணி நிறைவடைந்ததும் மாயமான மீனவர்கள் உயிரிழந்ததாக அறிவித்து அவர்களின் குடும்பத்தினருக்கு, கேரள அரசு வழங்குவது போன்று தமிழக அரசும் உரிய நிவாரணம் வழங்குவதுடன், அவர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி வரை கல்வி வழங்க அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். 
மீனவர் நலன் கருதி தூத்தூரில் தேசிய மேலாண்மை மையம் அமைப்பதுடன், வானிலை ஆய்வு மைய கிளை இங்கு அமைக்க அரசு ஆவன செய்ய வேண்டும். மீனவ மக்கள் ஒன்றிணைந்து நடந்தும் இந்த அறவழிப் போராட்டம் தொடர வேண்டும். என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com