சங்கர் ஆணவக்கொலை: எப்படிப்பட்ட தண்டனை? விரைவில் அறிவிப்பு

உடுலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில், கௌசல்யாவின் பெற்றோர் உட்பட 11 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், தண்டனை குறித்து இரு தரப்பும் வாதங்களை முன் வைத்துள்ளனர்.
சங்கர் ஆணவக்கொலை: எப்படிப்பட்ட தண்டனை? விரைவில் அறிவிப்பு


திருப்பூர்: உடுலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில், கௌசல்யாவின் தந்தை உட்பட 8 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், தண்டனை குறித்து இரு தரப்பும் வாதங்களை முன் வைத்துள்ளனர்.

சங்கர் கொலை வழக்கில், குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டிருப்போரிடம், தண்டனை பற்றி நீதிபதி அலமேலு கருத்துக் கேட்டு வருகிறார்.

தனக்கு மகன் இருப்பதால், குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருக்கும் சின்னசாமி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

அதே சமயம், தனது மகளையும் வேறொருவரின் மகனையும் கொலை செய்தவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்குமாறு அரசு தரப்பு வலியுறுத்தியுள்ளது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சங்கர் கொலை வழக்கில் நண்பகலில் தண்டனை விவரத்தை அறிவிப்பதாகக் கூறியுள்ளார்.

முன்னதாக, தமிழகத்தையே உலுக்கிய சங்கர் ஆணவக் கொலை வழக்கில், திருப்பூர் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன்  இன்று பரபரப்புத் தீர்ப்பை அளித்தார்.

சங்கர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அதாவது தந்தை சின்னசாமி உட்பட 8 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளார். தாய் அன்னலட்சுமி, தாய்மாமா பாண்டித்துரை உட்பட 3 பேரை விடுதலை செய்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி உடுமலையில், பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிக்க முக்கியச் சாலையில், குற்றவாளிகள் மணிகண்டன்,  கலை தமிழ்வாணன், ஜெகதீசன் உள்ளிட்டோர், சங்கர் மற்றும் கௌசல்யாவை அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் சங்கர் மரணம் அடைந்தார். கௌசல்யா படுகாயம் அடைந்தார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணை கடந்த மாதம் முடிவடைந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இன்று தீர்ப்பு வெளியாவதை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீதிமன்றத்தில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், சங்கர் வீட்டுக்கும் காவல்துறை பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

சம்பவத்தின் பின்னணி: திருப்பூர் மாவட்டம், உடுமலை, குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர் (22). இவரும், பழநியைச் சேர்ந்த கௌசல்யாவும் காதலித்து கலப்புத் திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து, கடந்த 2016 மார்ச் 13-ஆம் தேதி உடுமலையில் சங்கர் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். கௌசல்யாவும் படுகாயமடைந்து சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார்.

இச்சம்பவத்தையடுத்து,  இந்த வழக்கில் தொடர்புடையதாக கௌசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை உள்பட 11 பேரை உடுமலை போலீஸார் கைது செய்தனர்.

தொடர்ந்து, இந்த வழக்கு வன்கொடுமைத் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.

கூலிப்படையை வைத்து சங்கரைக் கொலை செய்ததாக, கௌசல்யாவின் பெற்றோர் மீது தொடரப்பட்ட வழக்கில், அவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் காவல்துறை சார்பில் சமர்ப்பிக்கப்பட்டதும், நேரடி சாட்சியாக கௌசல்யாவின் வாக்குமூலமும் மிப்பெரிய பலமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com