தோட்டக்கலைப் பயிர்களுக்கு இடுபொருள் மானியம் உயர்த்தி அறிவிப்பு

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலைப் பயிர்களுக்கான இடுபொருள் மானியத்தை தமிழக அரசு உயர்த்தி அறிவித்துள்ளது.
தோட்டக்கலைப் பயிர்களுக்கு இடுபொருள் மானியம் உயர்த்தி அறிவிப்பு

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலைப் பயிர்களுக்கான இடுபொருள் மானியத்தை தமிழக அரசு உயர்த்தி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:-
ஒக்கி புயல் கன்னியாகுமரி மாவட்ட தோட்டக் கலைப் பயிர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல் கட்ட ஆய்வில், 3 ஆயிரத்து 623 ஹெக்டேர் பரப்பளவுக்கும் அதிகமாக தோட்டக்கலைப் பயிர்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. குறிப்பாக, வாழை 1900 ஹெக்டேர் பரப்பிலும், ரப்பர் மரங்கள் சுமார் 1400 ஹெக்டேர் பரப்பிலும் சேதம் அடைந்துள்ளன. பயிர் சேத மதிப்பீட்டைக் கணக்கீடு செய்வதற்காக தோட்டக்கலைத் துறை மூலம் 90 குழுக்கள் அமைக்கப்பட்டு, கணக்கிடும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. வாழை பயிருக்கு சேத மதிப்பீடு 33 சதவீதத்துக்கும் கூடுதலாக இருந்தால், இடுபொருள் மானியமாக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒரு ஹெக்டேருக்கு ரூ.13,500 மட்டும் தற்போது வழங்கப்படுகிறது.
சிறப்பு உதவித் திட்டம்: இந்த நிலையில், ஓக்கி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட வாழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், வாழை சாகுபடியை மீண்டும் அவர்கள் தொடரும் வகையிலும் சிறப்பு வாழ்வாதாரத் தொகுப்பு உதவித் திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 
அதன்படி, மீண்டும் வாழை நடவு செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு உரம், பயிர்ப் பாதுகாப்பு மருந்துகள் உள்ளிட்ட இடுபொருள்களுக்கான செலவுத் தொகைக்காக, பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இப்போது வழங்கப்படும் ரூ. 13,500 ரூபாய்க்கு கூடுதலாக 40 சதவீத மானியமாக அளிக்கப்படும். இதைக் கொண்டு சாதாரண முறையில் சாகுபடி செய்வதற்கு ஹெக்டேருக்கு ரூ.35 ஆயிரம் வழங்கப்படும். திசு வளர்ப்பு மூலம் சாகுபடி செய்வதற்கு ஹெக்டேருக்கு ரூ.50 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். 
இதில் முதலாண்டு சாதாரண முறை சாகுபடிக்கு ரூ.39 ஆயிரத்து 750 மானியமும், திசு வளர்ப்பு சாகுபடிக்கு ரூ.51 ஆயிரமும் வழங்கப்படும். ஆக மொத்தம், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.48 ஆயிரத்து 500 முதல் ரூ.63 ஆயிரத்து 500 வரை (வழக்கமாக அளிக்கப்படும் 13,500 உடன் கூடுதலாக 40 சதவீதம் மானியம்) வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ரப்பர் விவசாயிகளுக்கு ரூ. 50 ஆயிரம்: அதுபோல, புயலால் பாதிக்கப்பட்ட ரப்பர் மர விவசாயிகளின் வாழ்வாதரத்தைப் பாதுகாக்கவும் சிறப்பு வாழ்வாதாரத் தொகுப்பு உதவித் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, பாதிக்கப்பட்ட ரப்பர் மரத் தோட்டங்களில் புதிதாக ரப்பர் மரம் பயிரிட விரும்பும் விவசாயிகள், ரப்பர் மர நடவு செய்து, ஊடுபயிராக வாழை அல்லது அன்னாசி சாகுபடி செய்வதற்கு ஹெக்டேருக்கு ஆகக் கூடிய முழு செலவான ரூ.50 ஆயிரத்தையும் தமிழக அரசு மானியமாக வழங்கும்.
அத்துடன், ரப்பர் மரத் தோட்டங்களில் தேனீ வளர்ப்பு மூலம் விவசாயிகளுக்கு கூடுதலாகக் கிடைக்கும் வருமானமும் புயலால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இழப்பை ஈடு செய்யும் வகையில் புதிய தேனீ வளர்ப்பு திட்டமும் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, ரப்பர் தோட்டங்களில் தேனீ வளர்ப்புக்கு, ஒரு ஹெக்டேர் பரப்புக்கு செலவாகும் ரூ.32 ஆயிரம் மதிப்பிலான 20 தேனீ பெட்டிகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆக மொத்தம், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட ரப்பர் மர விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.1 லட்சம் நிதி உதவியாக வழங்கப்படுகிறது.
கிராம்பு விவசாயிகளுக்கு ரூ. 10 ஆயிரம் கூடுதல் மானியம்: இது தவிர, இந்த மாவட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த கிராம்பு பயிர்கள் 43 ஹெக்டோர் பரப்பளவுக்குபாதிக்கப்பட்டுள்ளது. இந்த கிராம்பு விவசாயிகள் புதிதாக கிராம்பு நடவு செய்ய மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் ஹெக்டேருக்கு ரூ.18 ஆயிரம் இடுபொருள் மானிய உதவியுடன், கூடுதலாக ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம் மானியமும் சேர்த்து மொத்தம் ஹெக்டேருக்கு ரூ.28 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என முதல்வர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com