வாழ்வில் சிறக்க பாரதி வழி நடக்க வேண்டும்: நடிகர் டெல்லி கணேஷ்

வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் பாரதி வழியில் நடக்க வேண்டும் என்றார் திரைப்பட நடிகர் டெல்லி கணேஷ்.தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில்
பாரதி: பாரதி இலக்கியச் செல்வர், பாரதி பணிச்செல்வர் உள்ளிட்ட விருதுகளைப் பெற்ற பாரதி அன்பர்களுடன் நடிகர் டெல்லி கணேஷ். உடன், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்க நிர்வாகிகள்.
பாரதி: பாரதி இலக்கியச் செல்வர், பாரதி பணிச்செல்வர் உள்ளிட்ட விருதுகளைப் பெற்ற பாரதி அன்பர்களுடன் நடிகர் டெல்லி கணேஷ். உடன், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்க நிர்வாகிகள்.

வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் பாரதி வழியில் நடக்க வேண்டும் என்றார் திரைப்பட நடிகர் டெல்லி கணேஷ்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற மகாகவி பாரதியாரின் 136 ஆவது பிறந்தநாள் விழாவில் அவர் பேசியது:
பாரதியார் பிறந்த பூமிக்கு வந்ததை பெருமையாகக் கருதுகிறேன். நல்ல மனிதராக, நல்ல எழுத்தாளராக, நல்ல கவிஞராக வரவேண்டும் என்றாலும், வாழ்க்கை முழுமையாக சிறக்க வேண்டும் என்றாலும் பாரதியின் வழி நடக்க வேண்டும் என்றார் .
மதுரை கம்பன் கழகப் புரவலர் சங்கர சீதாராமன் பேசுகையில் தமிழை அனைவரும் நேசிக்க வேண்டும் என்று பாரதியார் நினைத்தார். பாரதியின் எழுத்துக்கும், வாக்குக்கும் நேர்மாறாக நிலைமை தற்போது உள்ளது. பாரதியின் எழுத்துகள், பேச்சுகளை கடைப்பிடிப்பதுதான் தமிழர்கள் அனைவரது வாழ்வின் குறிக்கோளாக அமைய வேண்டும். பாரதியாரை பற்றியும், தமிழைப் பற்றியும் எழுதுவதோடு நின்றுவிடாமல் அதை வாழ்க்கையிலும் கடைப்பிடிப்பதுதான் பாரதிக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி என்றார்.
அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்க அவை முன்னவர் வாசுகி கண்ணப்பன் தலைமை வகித்தார். சங்கத் தலைவர் கோ. பெரியண்ணன், பொதுச் செயலர் இதயகீதம் ராமானுஜம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியை ஆதிரா முல்லை வரவேற்றார்.
சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி பேராசிரியை விஜயலட்சுமி உள்ளிட்ட பாரதி அன்பர்கள் 34 பேருக்கு பாரதி பணிச்செல்வர் விருதும், பேராசிரியை வாசுகி கண்ணப்பனுக்கு பாரதி இலக்கியச் செல்வர் விருதும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, வல்லமை தாராயோ என்ற கவிதை நூல் தொகுப்பை டெல்லி கணேஷ் வெளியிட, முதல் பிரதியை உரத்தசிந்தனை ஆசிரியர் உதயம் ராம் பெற்றுக்கொண்டார். 
முன்னதாக, தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் தலைமையில் பாரதி பிறந்த இல்லத்தில் இருந்து பாரதியின் தேசபக்தி பாடல்களை, முழக்கமிட்டபடி தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், பாரதி அன்பர்கள் ஊர்வலமாக எட்டயபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பாரதி மணிமண்டபத்தை அடைந்தனர்.
சிங்கப்பூரை சேர்ந்த தமிழ்நேசன் முஸ்தபா, வைகை இலக்கிய கழகத் தலைவர் மு. சிதம்பரபாரதி, பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு, மதுரை செளராஷ்டிரா கல்லூரி கவுன்சில் தலைவர் வி.ஜி. ராம்தாஸ், புலவர் கி. வேலாயுதம், ராஜபாளையம் மணிமேகலை மன்றத் தலைவர் கோதண்டம், புலவர் வெ. சேகர், ராசி ராமலிங்கம், தூத்துக்குடி சி.எஸ். சென்பகமாறன் பாண்டியன், இசைக்கவி சண்டமாருதம், பதிப்பாளர் ராம குருமூர்த்தி, உமறுப்புலவர் சங்கத் தலைவர் உ. காஜாமைதீன், திரைப்பட இயக்குநர் பி.சி. அன்பழகன், பாரதி இல்ல காப்பாளர் மோகன், பொதிகை தமிழ்ச் சங்க தலைவர் கவிஞர் பே. ராஜேந்திரன் மற்றும் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தமிழ் எழுத்தாளர்கள், அறிஞர்கள், பாரதி அன்பர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com