வெளியூர் அரசியல் கட்சிப் பிரமுகர்களால் திணறும் வட சென்னை திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் 

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்தல் பிரசாரத்துக்கும்,

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்தல் பிரசாரத்துக்கும், களப்பணிக்கும் வந்துள்ள அரசியல் கட்சிப் பிரமுகர்களால் வடசென்னையில் உள்ள திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் திணறும் நிலை உருவாகியுள்ளது.
ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் பிரதானக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு வாக்குகள் சேகரிப்பதற்காக முன்னாள், இன்னாள் மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள், நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்.கே. நகரில் குவிந்துள்ளனர்.
இவர்களில் பெரும்பாலோர் அதிமுக வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருது கணேஷ், டிடிவி தினகரன் ஆகியோருக்காக வந்தவர்கள். இவர்களைத் தவிர பாஜக முழு நேர கட்சிப் பணி ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோரும் தொகுதிக்கு வந்துள்ளனர்.
எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல்: தற்போது நடைபெறவுள்ள இடைத் தேர்தல் அரசியல் கட்சிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடியதாக உள்ளது. களத்தில் இறங்கியுள்ள திமுக, அதிமுக வேட்பாளர்கள், சுயேச்சையாக போட்டியிடும் டிடிவி தினகரன் ஆகிய மூவருமே தங்களைச் சேர்ந்த கட்சிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாகவே கருதுகின்றனர்.
இதனால் இதில் யார் வெற்றி பெற்றாலும், அது அவருக்கான தனிப்பட்ட வெற்றி அல்ல. அவர் சார்ந்த கட்சியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல் என்பதால் தேர்தல் பிரசாரத்தில் மிக தீவிரமாக இவர்கள் மூவருமே களம் இறங்கியுள்ளனர்.
திணறும் திருமண மண்டபங்கள்: கட்சிகளின் தலைமை தங்களுக்கு ஒதுக்கியுள்ள பகுதிகளில் வெளியூர் அரசியல் பிரமுகர்கள் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு அரசியல் கட்சி சார்பிலும் தேர்தல் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆர்.கே.நகர் பகுதியில் தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதை அடுத்து ஆர்.கே.நகர் அருகில் உள்ள திருவொற்றியூர், மாதவரம், பெரம்பூர், ராயபுரம், துறைமுகம் உள்ளிட்ட வடசென்னையில் உள்ள திருமண மண்டபங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. தேர்தல் பிரசாரத்துக்காகவும், களப்பணிக்காகவும் வந்துள்ள தங்கள் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு இத்திருமண மண்டபங்களில் சாப்பாடு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்துத் தரப்பட்டுள்ளது. இதுதவிர நடுத்தர மக்கள் தங்கும் அனைத்து தங்கும் விடுதிகளும் வெளியூர் பிரமுகர்களால் நிரம்பி வழிகின்றன.
கார்த்திகை மாதம் என்பதால் திருமணம் உள்ளிட்ட சுபக்காரியங்கள் திருமண மண்டபங்களில் நடைபெற வாய்ப்பு இல்லாத சூழலில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் திருமண மண்டப உரிமையாளர்களுக்கு வருவாய் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com