நாகூர் அருகே கச்சா எண்ணெய்க் குழாயில் உடைப்பு

நாகையை அடுத்த நாகூர் சில்லடி கடற்கரை பகுதியில், பூமியில் புதைக்கப்பட்டிருந்த கச்சா எண்ணெய்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் வழிந்தோடியது திங்கள்கிழமை இரவு தெரியவந்தது.
நாகூர் சில்லடி கடற்கரை பகுதியில் கச்சா எண்ணெய்க் குழாயில் ஏற்பட்ட உடைப்பிலிருந்து வெளியாகி வழிந்தோடிய கச்சா எண்ணெய். 
நாகூர் சில்லடி கடற்கரை பகுதியில் கச்சா எண்ணெய்க் குழாயில் ஏற்பட்ட உடைப்பிலிருந்து வெளியாகி வழிந்தோடிய கச்சா எண்ணெய். 

நாகையை அடுத்த நாகூர் சில்லடி கடற்கரை பகுதியில், பூமியில் புதைக்கப்பட்டிருந்த கச்சா எண்ணெய்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் வழிந்தோடியது திங்கள்கிழமை இரவு தெரியவந்தது.
நாகூரை அடுத்த பனங்குடி கிராமத்தில் இயங்கி வரும் சிபிசிஎல் நிறுவனத்தில், கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும் பணி நடைபெறுகிறது. இந்த சுத்திகரிப்பு நிலையத்துக்கு கச்சா எண்ணெய்யைக் கொண்டு வரும் வகையில், நாகூர், நாகை உள்பட பல பகுதிகளில் பூமியில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. 
இதே போல, கப்பல் மூலம் கொண்டுவரப்படும் கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பு நிலையத்துக்குக் கொண்டு செல்லும் வகையில், நாகூர் கடற்கரை பகுதிகளிலும் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. 
இந்த நிலையில், நாகூர் சில்லடி கடற்கரை பகுதியில் புதைக்கப்பட்டிருந்த கச்சா எண்ணெய்யைக் கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அப்பகுதி தரை பரப்பில் கச்சா எண்ணெய் வழிந்தோடியது திங்கள்கிழமை இரவு தெரியவந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள், நாகூர் காவல் நிலையத்துக்கும், சிபிசிஎல் எண்ணெய் நிறுவனத்துக்கும் தகவல் அளித்தனர். இதையடுத்து, எண்ணெய் நிறுவன ஊழியர்கள் சில்லடி கடற்கரை பகுதிக்குச் சென்று, உடைப்பை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.
அப்போது, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் மேற்கொள்ளப்படும் சீரமைப்புப் பணிகளால் மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறி, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அப்பகுதி இளைஞர்கள் சிலர் வலியுறுத்தினர். நாகூர் போலீஸாரும், எண்ணெய் நிறுவன ஊழியர்களும், இளைஞர்களை சமாதானப்படுத்தினர்.
இதையடுத்து, குழாய் உடைப்பிலிருந்து வெளியாகும் கச்சா எண்ணெய் வழிந்தோடி பரவாமல் தடுக்கும் வகையில், உடைப்பு ஏற்பட்ட பகுதியில் பொக்லைனக் கொண்டு பெரிய அளவிலான குழி அமைத்து, கச்சா எண்ணெய்யைக் குழியில் தேக்கி, நீர் உறிஞ்சும் இயந்திரம் மூலம் உறிஞ்சி பாதுகாப்பாக வெளியேற்றும் பணிகளை எண்ணெய் நிறுவன ஊழியர்கள் மேற்கொண்டனர்.
இதனிடையே, குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணிகளை பொறியாளர்கள் மேற்கொண்டனர். பல மணி நேர பணிகளுக்குப் பின்னர், செவ்வாய்க்கிழமை காலை கச்சா எண்ணெய்க் குழாயின் உடைப்பு சீரமைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com