மதுரை, குமரியில் கேளிக்கை விடுதி மதுபானக் கூடங்களுக்குத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சில கேளிக்கை விடுதிகளில் செயல்பட்டு வரும் மதுபான கூடங்களுக்குத் தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சில கேளிக்கை விடுதிகளில் செயல்பட்டு வரும் மதுபான கூடங்களுக்குத் தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, வழக்குரைஞர் முகமது ரஸ்வி என்பவர், கேளிக்கை விடுதி என்ற பெயரில் அத்துமீறி நடைபெறும் மதுபான விற்பனைகளைத் தடுக்கக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்திலும் செயல்படுவதாக மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:
இந்தியா முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள மதுபான கடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் இந்த உத்தரவு முறையாக பின்பற்றப்படுவதில்லை. பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ள பகுதிகளில் மதுபானக் கூடங்கள் இருக்கக் கூடாது என்ற உத்தரவும் இங்கு கடைபிடிக்கப்படவில்லை.
பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்லும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரிலும், பாண்டி கோவில் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை அருகேயும் மதுபானக் கூடங்களுக்கு எப்படி அனுமதி அளிக்கப்பட்டது என்பது கேள்விக்குறியாக உள்ளது. மதுரையை பொறுத்தவரை கடந்த 1907 -ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் யூனியன் கிளப் தவிர மற்ற எந்த கிளப்புகளும் முறையான ஆவணங்களை பராமரிக்கவும் இல்லை, அவற்றைத் தாக்கல் செய்யவும் இல்லை. எனவே மதுரையில் உள்ள பூஞ்சோலை, ஏ.ஒன், கே.பி.எஸ், மல்லிகை, திருநகர் ஸ்போர்ட்ஸ் கிளப், பொதிகை, ரியல் பெஸ்ட் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள க்ளாஸிக் கோர்ட் ஸ்போர்ட்ஸ் ஆகிய கிளப்புகளுக்கான அனுமதி ரத்து செய்யப்படுகிறது. 
இந்த கூடங்கள் கட்டட வரைபட சான்று உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் மீண்டும் உரிமம் கோரி விண்ணப்பிக்கலாம். அதேசமயம் மதுபான கூடங்களுக்கு உரிய அனுமதி
பெறப்பட்டுள்ளதை அதிகாரிகள் ஆய்வு செய்து, முறைகேடு இருப்பின் சம்பந்தப்பட்ட மதுபானக் கூடங்களை மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com