மார்ச் 23-இல் தில்லியில் விவசாயிகள் மறியல் போராட்டம்: பி. அய்யாக்கண்ணு தகவல்

விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, வரும் மார்ச் 23-இல் புதுதில்லியில் விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தேசிய தென்னிந்திய நதிகள்

விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, வரும் மார்ச் 23-இல் புதுதில்லியில் விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி. அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் தரிசனம் செய்யும் வகையில் விவசாயிகள் சிலருடன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி. அய்யாக்கண்ணு செவ்வாய்க்கிழமை வந்தார். அனைத்து சன்னிதிகளிலும் வழிபாடு நடத்திய அவர், விவசாயிகள் கோரிக்கைகள்அடங்கிய துண்டுப் பிரசுரத்தை கோயில் சிவாச்சாரியார்கள், ஊழியர்கள் மற்றும் பக்தர்களிடம் வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: விவசாயிகள் விளைவிக்கும் பயிருக்கு நல்ல விலை வேண்டும், வறட்சியால் பாதித்த விவசாயிகளின் வேளாண் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த 141 நாள்கள் புதுதில்லியில் பல்வேறு நிலை போராட்டங்களை நடத்தினோம்.
புதுச்சேரி மற்றும் தமிழகம் கடந்த ஆண்டு வறட்சியால் வெகுவாக பாதிக்கப்பட்டது. நதிகள் இணைப்பு செய்யப்பட்டால் பெரும்பான்மையான பிரச்னைகளுக்குத் தீர்வுகாண முடியும் என போராடினோம். ஒவ்வொரு நாளும் நாட்டின் பல்வேறு மாநில முதல்வர்கள், எம்.பி.க்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வந்து சந்தித்துப் போராட்டத்தை ஆதரித்துப் பேசினர். பிரதமர் நரேந்திர மோடி மட்டும் விவசாயிகளைச் சந்திக்க இதுவரை விரும்பவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் கோரிக்கைகளை செவிமெடுத்து கேட்க வேண்டும், கோரிக்கைகளை நிறைவேற்ற அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான சிந்தனை அவருக்கு ஏற்பட வேண்டி, தமிழகத்தில் தினமும் ஒரு கோயிலில், கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வைத்து பிரார்த்தனை செய்து வருகிறோம்.
இக்கோரிக்கைகளை முன்வைத்து 2018-ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி அன்னா ஹசாரே உள்ளிட்டோர் பங்கேற்புடன் விவசாயிகள் ஒருங்கிணைந்து, புதுதில்லியில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம் என்றார் அய்யாக்கண்ணு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com