குட்கா ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: சு.திருநாவுக்கரசர்

குட்கா ஊழல் தொடர்பான விசாரணையை சிபிஐ வசம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.
குட்கா ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: சு.திருநாவுக்கரசர்

குட்கா ஊழல் தொடர்பான விசாரணையை சிபிஐ வசம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: குட்கா ஊழல் குறித்து ஆதாரங்கள் தொடர்ந்து வெளிவருகின்றன. சட்டவிரோதமாக குட்கா தயாரித்து விற்பனை செய்வதற்கு ஆளுங்கட்சி அமைச்சர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் துணை போயிருப்பது கண்டிக்கத்தக்கது.
வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் தமிழக அமைச்சர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ரூ.39.91 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பது ஆதாரங்களுடன் சிக்கியுள்ளது. இதனடிப்படையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12}இல் வருமான வரித்துறையின் புலனாய்வுத்துறை இயக்குநர் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக அன்றிருந்த ராமமோகன் ராவிடம் ஆதாரங்களுடன் அறிக்கை வழங்கியுள்ள செய்தி வெளியாகியுள்ளது. அதனை அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால், குட்கா ஊழல் குறித்து வருமான வரித்துறையிடமிருந்து எந்தவிதமான அறிக்கையும் வழங்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசின் சார்பாகக் கூறப்பட்டது. இது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயலாகும். இதை உணர்ந்த நீதிமன்றம் ஆவணங்களைத் தேடிக் கண்டுபிடித்து முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டது. 
எனினும், இதுவரை அந்த ஆவணங்களைத் தேடுவதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடாமல் ஊழல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் முயற்சியில் அதிமுக அரசு ஈடுபட்டு வருகிறது. எனவே, குட்கா ஊழலில் தமிழக அமைச்சர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தொடர்புள்ளதால், இந்த வழக்கை லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை நடத்துவதனால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. அதனால், வழக்கு விசாரணையை சிபிஐ வசம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com