போலி வாக்காளர்களை நீக்க நடவடிக்கை: தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

போலியாக வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்கள் மற்றும் அதற்குக் கருவியாகச் செயல்பட்ட அரசியல் கட்சியினர் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம்
போலி வாக்காளர்களை நீக்க நடவடிக்கை: தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

போலியாக வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்கள் மற்றும் அதற்குக் கருவியாகச் செயல்பட்ட அரசியல் கட்சியினர் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள 5 ஆயிரத்து 117 போலி வாக்காளர்களை உடனடியாக நீக்க உத்தரவிடக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் வாதங்கள் நிறைவடைந்து தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் அடங்கிய அமர்வு புதன்கிழமை பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:}
ஆர்.கே.நகர் தொகுதியில் 44 ஆயிரத்து 999 போலி வாக்காளர்களை நீக்கக் கோரி திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், 45 ஆயிரத்து 836 போலி வாக்காளர்களை நீக்க விட்டதாக தேர்தல் ஆணையம் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அதனையடுத்து இன்னும் 5 ஆயிரத்து 117 போலி வாக்காளர்கள் நீக்கப்படவில்லை எனக் கோரி திமுக மீண்டும் தொடர்ந்த 
வழக்கில், 2 ஆயிரத்து 200 பேரை நீக்கிவிட்டதாகவும், இரட்டைப்பதிவு கொண்ட ஆயிரத்து 947 வாக்காளர்களை மட்டும் பட்டியலில் இருந்து நீக்க வேண்டியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. சரியான நேரத்தில் திமுக வழக்குத் தொடராமல் இருந்திருந்தால் இந்த தேர்தல் 45 ஆயிரத்து 836 போலி வாக்காளர்களுடன் தேர்தல் நடந்திருக்கும். 
போலி வாக்காளர்களை நீக்கியபின் ஆர்.கே.நகர் தொகுதியில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் கூட இன்னும் 1947 பேர் நீக்கப்படாமல் இருப்பதும், இந்த தொகுதியில் 45 ஆயிரத்து 836 போலி வாக்காளர்கள் இருந்துள்ளதும் அதிர்ச்சியளிக்கிறது. 
மேலும் இந்தத் தொகுதிக்கான வேட்பு மனுத்தாக்கல் முடிந்துவிட்டதால், வாக்காளர் பட்டியலில் மாற்றம் செய்ய முடியாது என்றும், தொகுதியிலிருந்து இடம் மாறியவர்கள், இறந்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, வாக்குப்பதிவின் போது வாக்காளிப்பவரின் கைரேகை மற்றும் கையொப்பம் பெற உத்தரவிட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.எனவே இந்த பட்டியலை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வழங்க வேண்டும்.
அரசியல் கட்சியினர் மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையம் வீடுகள் தோறும் சென்று சரிபார்த்து வாக்காளர் பட்டியலை வெளியிட்ட போதும் 45 ஆயிரம் போலி வாக்காளர்கள் இருந்துள்ளனர் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே, வாக்காளர் பட்டியலில் போலியாக இடம்பெற்றவர்கள் மீதும், இதற்குக் கருவியாகச் செயல்பட்ட அரசியல் கட்சிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மீதும் உரிய நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம். 
போலி வாக்காளர்களுக்கு நிரந்தர தடை: தேர்தலில் ஒரு வாக்கு கூட வெற்றி தோல்வியை தீர்மானிக்கும். இந்த போலி வாக்காளர்களைக் கண்டறிந்து அவர்கள் வாக்களிக்கவே முடியாத வகையில் நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும். இந்த போலி வாக்காளர் பட்டியலை காவல்துறைக்கு அனுப்பி தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
திமுகவுக்குப் பாராட்டு: இந்த விவகாரத்தில் போலி வாக்காளர்களைச் சுட்டிக்காட்டி உரிய நேரத்தில் வழக்குத் தொடர்ந்த மனுதாரரையும், மனுதாரர் தரப்பு வழக்குரைஞரையும் பாராட்டுவதாகக் கூறி இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com