மாற்றுத் திறனாளியிடம் லஞ்சம் பெற்றபோது விடியோவில் சிக்கிய கண் மருத்துவர் தற்கொலை

மாற்றுத் திறனாளிக்கு சான்றிதழ் கொடுக்க லஞ்சம் பெறும் போது விடியோவில் சிக்கிய எழும்பூர் கண் மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் கண்காணிப்பாளர் ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்டார்.
மாற்றுத் திறனாளியிடம் லஞ்சம் பெற்றபோது விடியோவில் சிக்கிய கண் மருத்துவர் தற்கொலை


சென்னை: மாற்றுத் திறனாளிக்கு சான்றிதழ் கொடுக்க லஞ்சம் பெறும் போது விடியோவில் சிக்கிய எழும்பூர் கண் மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் கண்காணிப்பாளர் ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்டார்.

கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிக்கு, சான்றிதழ் கொடுக்க ரூ.500 லஞ்சமாகத் தர வேண்டும் என்று ஸ்ரீதர் கூறி, பணத்தைப் பெற்றுக் கொள்ளும் விடியோவை அறப்போர் இயக்கத்தினர் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டனர்.

இந்த விடியோவில் இடம்பெற்றிருந்த மருத்துவர் ஸ்ரீதர், பொன்னேரியில் உள்ள தனது நண்பரின் இல்லத்தில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், இந்த தகவல் இன்று தான் தெரிய வந்திருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அறப்போர் வெளியிட்ட அந்த விடியோ சுமார் 7 நிமிடம் ஓடுகிறது. அதில் ஒரு நபர் தனக்கு 50 சதவீத பார்வைக் குறைபாடு இருப்பதற்கான சான்றிதழ் கோருகிறார். அதற்கு ரூ.500 கட்டணமாக அளிக்கும்படி வலியுறுத்தப்படுகிறார். மாற்றுத்திறனாளியோ, தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றும், மிச்ச பணத்தை தனது நண்பர் மூலமாக கொடுப்பதாகவும் கூறி ரூ.200ஐ மருத்துவரின் உதவியாளரிடம் கொடுக்க, சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்த விடியோவை வெளியிட்ட அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராம் வெங்கடேசன், இந்த விடியோவில் இருக்கும் மாற்றுத்திறனாளி, அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்தவர். அவரிடம் இருந்த பழைய சான்றிதழைப் புதுப்பிப்பதற்காக சென்ற போது இந்த விடியோ எடுக்கப்பட்டது என்றார்.

இது குறித்து லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணை தொடங்கப்பட்டுவிட்டதாக சுகாதாரத் துறை செயலர் ஜே. ராதாகிருஷ்ணன் தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் அமைப்பின் பொதுச் செயலர் நம்புராஜன் இது பற்றி கூறுகையில், வெளிச்சத்துக்கு வந்திருக்கும் விஷயம் மிகவும் வெட்கக்கேடானது. ஆனால், இது ஒரே ஒரு சம்பவம் மட்டுமல்ல; மருத்துவர்களுக்கு லஞ்சம் பெற்றுத்தர ஏராளமான தரகர்களும் மருத்துவமனையில் இருக்கிறார்கள். மருத்துவர்கள் இந்த தரகர்கள் மூலமாக லஞ்சம் வாங்கிக் குவிக்கிறார்கள் என்று கூறினார்.

இந்த நிலையில், எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் கண்காணிப்பாளர் பதவியில் இருந்து நீக்க பரிந்துரை செய்யப்பட்டிருந்த நிலையில் ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com