"காளை'களுடன் மோதத் தயாராகும் காளைகள்!

பொங்கல் பண்டிகையின்போது நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுக்கு காளைகளைத் தயார்படுத்துவதற்காக, அவற்றுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பது தொடங்கியிருக்கிறது.
மதுரை அடுத்த குலமங்கலம் கண்மாயில் ஜல்லிக்கட்டு காளைக்கு நீச்சல் பயிற்சி அளிக்கும் இளைஞர்கள்.
மதுரை அடுத்த குலமங்கலம் கண்மாயில் ஜல்லிக்கட்டு காளைக்கு நீச்சல் பயிற்சி அளிக்கும் இளைஞர்கள்.

பொங்கல் பண்டிகையின்போது நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுக்கு காளைகளைத் தயார்படுத்துவதற்காக, அவற்றுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பது தொடங்கியிருக்கிறது.
பொங்கல் பண்டிகையின்போது மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு பிரபலமானது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைக் காண வெளிநாட்டினரும் வருவது வழக்கம். தை மாதம் முதல் தேதி அவனியாபுரத்திலும், மாட்டுப் பொங்கல் தினத்தன்று பாலமேட்டிலும், அதற்கு அடுத்த நாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும்.
மதுரை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்தும் தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட வெளிமாவட்டங்களிலும் இருந்தும் காளைகள் கொண்டு வரப்படும்.
இந்நிலையில், விலங்குகள் நல அமைப்புகள் தொடர்ந்த வழக்குகள் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதில் தடை ஏற்பட்டது. நீதிமன்ற வழிகாட்டுதல்படி கடந்த காலங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் நேரடிப் பார்வையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. 
எனினும் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு நடத்த முடியவில்லை.
இந்நிலையில், கடந்த ஜனவரியில் அலங்காநல்லூரில் தொடங்கி தமிழகம் முழுவதும் பெரும் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து தமிழக அரசால் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு பிப்ரவரியில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.
இந்நிலையில், அவசர சட்டத்துக்கு தடை கோரி விலங்குகள் நல அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அவசர சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்துள்ளதால், நிகழ் ஆண்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு சட்ட ரீதியாக அனுமதி கிடைத்துள்ளது. 
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டியினர், தற்போது ஆயத்த பணிகளைத் தொடங்கியிருக்கின்றனர்.
காளைகள் வளர்ப்பவர்களும் காளைகளுக்கு பயிற்சிகளைத் தொடங்கியிருக்கின்றனர். அலங்காநல்லூர், பாலமேடு, வாடிப்பட்டி, சோழவந்தான், குலமங்கலம், பனங்காடி, சமயநல்லூர், அவனியாபுரம், மேலமடை, கருப்பாயூரணி, மேலூர் உள்பட மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் வீடுகளில் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
ஜல்லிக்கட்டுக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில், பல இடங்களில் காளைகளைத் தயார்படுத்துவதற்காக அவற்றுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
மாடுபிடி வீரர்களிடம் காளைகள் பிடிபடாமல் செல்வதற்கு, வாடிவாசலில் இருந்து வெளியேறும்போதே வேகமாகச் செல்ல வேண்டும். இதற்காக, காளைகளுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. கண்மாய்களில் தினமும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பயிற்சி அளிக்கப்படும். 
இந்த நீச்சல் பயிற்சியானது, காளைகளுக்கு சுறுசுறுப்பை அளிக்கும். மாடுபிடி வீரர்களை அருகே நெருங்க விடாமல் வேகமாக ஓடுவதற்கு இப்பயிற்சி அவசியம் என்று காளை வளர்ப்பவர்கள் கூறுகின்றனர்.
மாடுபிடி வீரர்களை நெருங்க விடாமல் செய்வதற்கு, மண் குத்தும் பயிற்சி அளிக்கப்படும். பிற காளைகளைப் பார்க்கும்போதும், சம்பந்தமில்லாத நபர்கள் அருகில் வந்து சீண்டும்போதும் தனது கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் காலால் மண்ணை சுரண்டுவதும், கொம்பால் மண்ணை குத்துவதும் காளைகளின் இயல்பு. ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்களின் பிடியில் சிக்காமல், அவர்களைப் பயமுறுத்தி விரட்டுவதற்காக மண்ணை குத்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
பாரம்பரியமாக ஜல்லிக்கட்டுக் காளைகள் வளர்த்து வரும் மதுரை அருகே உள்ள குலமங்கலம் கி ராமத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் கே.எம். திருப்பதி கூறியது:
எங்களது குடும்பத்தில் இப்போது 5 காளைகளைப் பராமரித்து வருகிறோம். இவற்றுக்கு கோதுமைத் தவிடு மற்றும் தீவனங்கள் வழக்கமான நாள்களில் அளிக்கப்படும். 
ஜல்லிக்கட்டு தொடங்கும் தை மாதத்துக்கு முன்பாக சிறப்பு உணவுகள் வழங்கப்படும். முக்கியமாக பச்சரிசி, வெல்லம், இரும்புச் சோளம் ஆகியன ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கு வழங்கப்படும். அதேபோல, காலையில் தினமும் ஒவ்வொரு காளைக்கும் தலா 5 நாட்டுக் கோழி முட்டைகள் வழங்கப்படும். இந்த உணவுகள் காளைகளின் திடகாத்திரத் தன்மையை மேலும் அதிகப்படுத்தும் என்றார்.
ஜல்லிக்கட்டுக்கு அழைத்துச் செல்ல காளைகள் தயார்படுத்துவதைப் போல, மாடுபிடி வீரர்களான காளையர்களும் தயாராகி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com