திருச்செந்தூர் முருகன் கோயிலில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண் சாவு

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வியாழக்கிழமையன்று காலையில் கோயில் கிரிப் பிரகாரத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் இடிந்து விழுந்த மேற்கூரை.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் இடிந்து விழுந்த மேற்கூரை.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வியாழக்கிழமையன்று காலையில் கோயில் கிரிப் பிரகாரத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கற்களால் கட்டப்பட்ட கோவிலாகும். இக்கோயிலில் கிரிப்பிரகாரத்தில் இருபக்கமும் உருளை வடிவிலான தூண்களால் ஆன மேற்கூரையுடன் கூடிய நடைபாதை கடந்த 1974}ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை காலை 10.15 மணியளவில், திருக்கோயில் கிரிவலப்பாதையில் வடக்குவாசல் கடற்கரை அருகே நடைபாதையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. 
இதனைப் பார்த்து அருகே இருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து நாலாபக்கமும் சிதறி ஓடினர். சம்பவம் பற்றி தகவலறிந்த திருச்செந்தூர் திருக்கோயில் முதுநிலை கணக்கு அலுவலர் மதிவாணன் உள்ளிட்ட பணியாளர்கள், திருக்கோயில் காவல் நிலைய ஆய்வாளர் ஷடஜாராணி தலைமையிலான காவல்துறையினர், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு கூடினர். மேலும்; தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகர் தலைமையிலான வீரர்கள் மற்றும் ஜேசிபி இயந்திரத்துடன் மீட்புபணி நடைபெற்றது.
கட்டட இடிபாடுகளில் சிக்கி திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆதிநாராயணன் மனைவி பேச்சியம்மாள் (44) உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் திருச்செந்தூர் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த பெருமாள் மகன் செந்தில்ஆறுமுகம் (64) , திருப்பூர் வாயுப்பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் கந்தசாமி (74) படுகாயங்களுடன் உயிர்தப்பினர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர், மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், காவல் கண்காணிப்பாளர் பெ.மகேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், திருச்செந்தூர் கோட்டாட்சியர் மா.கணேஷ்குமார், வட்டாட்சியர் இரா.அழகர், பேரூராட்சி செயல் அலுவலர் ரா.மனோரஞ்சிதம் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் ஆட்சியர் என்.வெங்டேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இடிந்து விழுந்த பகுதி மற்றும் கோயில் கட்டடங்களின் தன்மை குறித்து ஆய்வு நடத்திட ஐவர் குழு ஒன்று அமைக்கப்படும். இந்த குழுவில் கோயில் இணை ஆணையர், பேரூராட்சி செயல் அலுவலர், பொதுப்பணித்துறையினர் இடம்பெறுவர். இக்குழு உடனடியாக கோயில் கட்டடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும், அதன் பின்னரே கிரிவலப்பாதையில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறினார்.
பக்தர்கள் கிரிப்பிரகாரம் செல்லும் இப்பாதை வழியாகத்தான் நாள்தோறும் தங்கத்தேர் வீதி உலாவும் நடைபெறும். ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழாவையொட்டி இந்த நடைபாதை வர்ணம் தீட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த கிரிவலப்பாதை நடைபாதையினை சீரமைக்க பக்தர்கள் தரப்பில் ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
கோயில் 2.30 மணி நேரம் நடையடைப்பு : திருக்கோயில் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததையடுத்து, கோயில் காலை 10.30 மணிக்கு நடைசாத்தப்பட்டு, பிற்பகல் 1.00 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. இதனால் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் காத்திருந்தனர். இடிபாடுகள் நடந்த கிரிவலப்பாதையானது பக்தர்கள் செல்லாத வண்ணம் தாற்காலிக தடுப்பு அமைக்கப்பட்டது. மேலும் கோயிலைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com