22 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்ட அத்தாளநல்லூர் கோயில் சிலைகளை மீட்க நடவடிக்கை

திருநெல்வேலி மாவட்டம் அத்தாளநல்லூர் சிவன் கோயிலில் 22 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்ட சிலைகள் மீட்கப்பட்டு 3 மாதங்களில் தமிழகம் கொண்டு வரப்படும் என தமிழக சிலைக்
துவார பாலகர் சிலைகள்
துவார பாலகர் சிலைகள்

திருநெல்வேலி மாவட்டம் அத்தாளநல்லூர் சிவன் கோயிலில் 22 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்ட சிலைகள் மீட்கப்பட்டு 3 மாதங்களில் தமிழகம் கொண்டு வரப்படும் என தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
வீரவநல்லூர் அருகே அத்தாளநல்லூர் மூன்றீஸ்வரர் சிவன் கோயில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது. சுமார் 1,600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயிலில் கலைநுட்பம் மிக்க கற்சிலைகளும், உலோகச் சிலைகளும் உள்ளன.
கடந்த 1995-இல் இங்கிருந்த ரூ. 4.98 கோடி மதிப்புள்ள இரு துவாரபாலகர் சிலைகள் திருட்டுப் போயின. இதுகுறித்து வீரவநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் இவ்வழக்கில் எவ்வித துப்பும் துலக்க முடியாமல் போனதால் 22 ஆண்டுகள் கடந்து போயின.
இதற்கிடையே சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. ஏ.ஜி. பொன் மாணிக்கவேல், இவ்வழக்கு குறித்து அண்மையில் விசாரணை மேற்கொண்டார். அவர் நடத்திய விசாரணையில், சர்வதேச சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர் தலைமையிலான கும்பலைச் சேர்ந்தவர்கள்தான் இச்சிலை திருட்டில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து இவ்வழக்கு விசாரணை வீரவநல்லூர் போலீஸாரிடமிருந்து, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு மாற்றம் செய்யப்பட்டது.
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் இவ்வழக்கில் தொடர்புடைய மாமல்லபுரம் லட்சுமி நரசிம்மன், சென்னை மயிலாப்பூர் ஊமைத்துரை, தஞ்சை அண்ணாதுரை, மும்பை வல்லப பிரகாஷ், அவரது மகன் ஆதித்ய பிரகாஷ் ஆகியோரைக் கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் சுபாஷ் சந்திர கபூர் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சுபாஷ் சந்திர கபூரை போலீஸார், காவலில் 3 நாள்கள் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர். 
ஆஸ்திரேலிய அதிகாரிகள் ஆய்வு: அத்தாளநல்லூர் சிவன் கோயிலில் திருடப்பட்ட இரு துவாரபாலகர் சிலைகளும் மும்பை வழியாக ஆஸ்திரேலியாவுக்குக் கடத்தப்பட்டதும் ஆஸ்திரேலிய நாட்டின், கேன்பெரா நகரில் உள்ள ஆஸ்திரேலிய தேசிய அருங்காட்சியகத்தில் இச்சிலைகள் வைக்கப்பட்டிருப்பதும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்குத் தெரிய வந்தது. சிலைத் திருட்டுக் கும்பலிடமிருந்து இரு சிலைகளையும் குறைந்த விலைக்கு வாங்கி, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிலருக்கு கபூர் விற்றதும் போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அச்சிலைகளை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்கும்படி தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், கேன்பெரா அருங்காட்சியகத்துக்குக் கடிதம் எழுதினர். 
3 மாதங்களில் கொண்டு வரப்படும்: இது தொடர்பாக தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவை உயர் அதிகாரி கூறியதாவது:
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கடிதத்தின் அடிப்படையில் ஆஸ்திரேலிய அரசு அதிகாரிகள் தமிழகத்துக்கு அண்மையில் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் ஆஸ்திரேலிய தேசிய அருங்காட்சியகத்தில் இருக்கும் துவாரபாலகர் சிலைகள், அத்தாளநல்லூர் சிவன் கோயிலில் திருடப்பட்டதுதான் என்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து, ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள அச்சிலைகளை மீட்டு, தமிழகத்துக்கு கொண்டு வரும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் 3 மாதங்களுக்குள் ஆஸ்திரேலியாவில் உள்ள துவாரபாலகர் சிலைகள் தமிழகத்துக்கு கொண்டு வரப்படும் என்றார்.
வழக்கில் தொடர்புடைய அனைத்து எதிரிகளுக்கும் நீதிமன்றம் மூலம் விரைவில் தண்டனை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com