கடலூரில் அரசு அதிகாரிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்ஆய்வு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அரசுத் துறை அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை கடலூரில் ஒன்றரை மணி நேரம் ஆய்வு செய்தார்.
கடலூர் வண்டிப்பாளையம் பகுதியில் வெள்ளிக்கிழமை தூய்மைப் பணியில்  ஈடுபட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
கடலூர் வண்டிப்பாளையம் பகுதியில் வெள்ளிக்கிழமை தூய்மைப் பணியில்  ஈடுபட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அரசுத் துறை அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை கடலூரில் ஒன்றரை மணி நேரம் ஆய்வு செய்தார். அப்போது, அரசின் திட்டங்களை தடையின்றி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஆளுநர் பங்கேற்றார். பின்னர், கடலூரில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கினார். தொடர்ந்து, வெள்ளிக்கிழமை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே உள்ளிட்ட முக்கியத் துறைகளின் அதிகாரிகளுடன் சுற்றுலா மாளிகையில் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். 
அதிகாரிகள் விளக்கம்: கடலூர் மாவட்டத்தின் நில அமைவு, முக்கிய வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள், தொழில்கள், விவசாயம் உள்ளிட்டவை குறித்த அடிப்படை தகவல்களை ஒளிப்படக் காட்சிகளுடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் அவருக்கு விளக்கினர். பின்னர் மாவட்டத்தில் தற்போதைய விவசாய நிலவரம், கல்வியறிவு, பிறப்பு, இறப்பு விகிதம், சுகாதார வசதி, தொழில் துறை வளர்ச்சி, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் நிலை ஆகியவை குறித்த விவரங்களை ஆளுநர் கேட்டறிந்தார். 
கடலூர் மாவட்டம் கடந்த 10 ஆண்டுகளாக சுனாமி, தானே புயல், நிஷா புயல் உள்ளிட்ட பேரிடர்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டதை அதிகாரிகள் விளக்கினர்.
தொடர்ந்து, தூய்மை இந்தியா திட்டம், பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம் போன்ற மத்திய அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்த ஆளுநர், அரசின் திட்டங்களை பாரபட்சமின்றி செயல்படுத்த வேண்டும் என்றும், இந்தத் திட்டங்கள் மக்களுக்கு தடையின்றி சென்றடையும் வகையில் அரசுத் துறையினர், நேர்மையாகப் பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். காலை 11 மணிக்குத் தொடங்கிய ஆய்வுக் கூட்டம், சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்தது.
ஊரக வளர்ச்சித் துறை, கல்வித் துறை, வேளாண் துறை, வனத் துறை, மீன் வளத் துறை, சுகாதாரத் துறை மற்றும் என்எல்சி இந்தியா நிறுவன அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். ஆனால், காவல் துறையினர், செய்தியாளர்கள், வெளி நபர்கள் கூட்டத்தில் அனுமதிக்கப்படவில்லை. மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பொதுமக்களிடம் மனு: கடலூரில் ஆளுநரை பொதுமக்கள் நேரில் சந்தித்து மனுக்களை அளிக்கலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, பிற்பகல் ஒரு மணியளவில் சுற்றுலா மாளிகை வாயிலில் ஆளுநர் மனுக்களைப் பெற்றார். அவரிடம் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், பொது நல அமைப்பினர் நீண்ட வரிசையில் காத்திருந்து மனுக்களை அளித்தனர். மக்களின் கோரிக்கைகளை ஆளுநர் பொறுமையுடன் கேட்டறிந்தார். சுமார் 45 நிமிடங்கள் நின்றபடி பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற ஆளுநர், அவற்றை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி நடவடிக்கை எடுக்கும்படி கூறினார்.
இதையடுத்து, பிற்பகல் 2.15 மணியளவில் ஆளுநர் பன்வாரிலால் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.

தூய்மைப் பணியில் ஈடுபட்டார்

முன்னதாக, காலை 9.30 மணியளவில் தூய்மை இந்தியா திட்டப் பணியை தொடக்கி வைப்பதற்காக சுற்றுலா மாளிகையில் இருந்து ஆளுநர் புறப்பட்டார். அப்போது, வழியில் பாரதி சாலையில் திமுகவினர் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கருப்புக் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால், மாற்றுப் பாதையில் செம்மண்டலம், கம்மியம்பேட்டை வழியாக வண்டிப்பாளையம் கற்பக விநாயகர் கோவில் தெருவுக்கு ஆளுநர் சென்றார். அங்கு, குப்பைகளை அகற்றி தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.
அப்போது, ஆளுநரின் கூடுதல் முதன்மைச் செயலர் ராஜகோபால், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். 
தூய்மை இந்தியா திட்டம் குறித்து பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி, வாசிக்கக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து, அருகே உள்ள வண்ணாரப்பாளையம் அம்பேத்கர் நகர் குடிசைப் பகுதிக்குச் சென்றவர், அங்கிருந்த கழிப்பிட வளாகத்தைப் பார்வையிட்டார். அங்கிருந்த பெண்களிடம், கழிப்பிடத்தை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
அப்போது அந்தப் பகுதி மக்கள், அடிப்படை வசதி, கழிவு நீர் வடிகால், இலவச வீடுகள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்தக் கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார் எனக் கூறிச் சென்றார் .
கருப்புக் கொடி: திரும்பும் வழியில், பாரதி சாலை வழியாக ஆளுநர் காரில் வந்தபோது, திமுகவினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போது, அங்கிருந்தவர்களை டிஎஸ்பி பாண்டியன் தலைமையிலான போலீஸார் தடுத்து அப்புறப்படுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com