ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் என்று சொன்னது ஏன்? பிரதாப் ரெட்டி விளக்கம்

அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே, ஆபத்தான நிலையில் தான் ஜெயலலிதா இருந்தார் என்று மருத்துவமனை குழு தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் என்று சொன்னது ஏன்? பிரதாப் ரெட்டி விளக்கம்


சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே, ஆபத்தான நிலையில் தான் ஜெயலலிதா இருந்தார் என்று மருத்துவமனை குழு தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.

சென்னையில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதாப் ரெட்டி, செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, செப்டம்பர் 22ம் தேதி ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆபத்தான நிலையில் தான் கொண்டு வரப்பட்டார் என்று தெரிவித்தார்.

மேலும் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த பிரதாப் ரெட்டி, ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை நடைபெற்று வருவதால் வேறு எதுவும் இப்போது பேச முடியாது. எங்கள் மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையத்திடம் இருந்து சம்மன் வந்துள்ளது. எனக்கு எந்த சம்மனும் வரவில்லை.

ஜெயலலிதா மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட போது, அவரது உடல்நிலை குறித்து மக்கள் அச்சம் கொள்ளக் கூடாது என்பதற்காகவே காய்ச்சல் என்று மருத்துவமனை அறிக்கை அளித்தது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை வந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த உண்மை நிலையை தெரிவிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, செப்டம்பர் 22ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது பேச்சு மூச்சற்ற நிலையில்தான் இருந்ததாக மருத்துவமனையின் துணைத் தலைவர் ப்ரீதா ரெட்டி பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சுமார் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

அவர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டதும், நீர்சத்து குறைபாடு, காய்ச்சல், நிமோனியா பாதித்திருந்தாகக் கூறப்பட்டது. ஆனால், மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட போது அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததாக அவர் அனுமதிக்கப்பட்டபோது பதிவு செய்யப்பட்ட மருத்துவ அறிக்கை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், புது தில்லியில் தனியார் தமிழ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவமனையின் துணைத் தலைவர் ப்ரீதா ரெட்டி கூறுகையில், "ஜெயலலிதா மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படும் போதே பேச்சு மூச்சற்ற நிலையில்தான் இருந்தார். மருத்துவமனையில் தொடர் சிகிச்சைகளுக்குப் பிறகு அவர் உடல் நலம் தேறினார்" என்று தெரிவித்திருந்தார்.

ப்ரீதா ரெட்டியின் பேட்டி நேற்று வெளியான நிலையில், பிரதாப் ரெட்டி இன்று செய்தியாளர்களிடம் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com