பேச்சு மூச்சற்ற நிலையில்தான் ஜெயலலிதா அப்பல்லோ கொண்டு வரப்பட்டார்: மருத்துவமனை நிர்வாகம்

செப்டம்பர் 22ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது பேச்சு மூச்சற்ற நிலையில்தான் இருந்ததாக மருத்துவமனையின் துணைத் தலைவர் ப்ரீதா ரெட்டி கூறியுள்ளார்.
பேச்சு மூச்சற்ற நிலையில்தான் ஜெயலலிதா அப்பல்லோ கொண்டு வரப்பட்டார்: மருத்துவமனை நிர்வாகம்


சென்னை: செப்டம்பர் 22ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது பேச்சு மூச்சற்ற நிலையில்தான் இருந்ததாக மருத்துவமனையின் துணைத் தலைவர் ப்ரீதா ரெட்டி கூறியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சுமார் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

அவர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டதும், நீர்சத்து குறைபாடு, காய்ச்சல், நிமோனியா பாதித்திருந்தாகக் கூறப்பட்டது. ஆனால், மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட போது அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததாக அவர் அனுமதிக்கப்பட்டபோது பதிவு செய்யப்பட்ட மருத்துவ அறிக்கை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், புது தில்லியில் தனியார் தமிழ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவமனையின் துணைத் தலைவர் ப்ரீதா ரெட்டி கூறுகையில், "ஜெயலலிதா மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படும் போதே பேச்சு மூச்சற்ற நிலையில்தான் இருந்தார். மருத்துவமனையில் தொடர் சிகிச்சைகளுக்குப் பிறகு அவர் உடல் நலம் தேறினார்" என்று தெரிவித்துள்ளார்.

"துரதிர்ஷ்டவசமாக, யாருமே எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்து விட்டது. இதில் விதியைத் தவிர, வேறு யாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றே நான் கருதுகிறேன்" என்கிறார்.

ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது மரணத்தின் பின்னணியில் யாருக்கேனும் தொடர்பிருக்கலாம் என்ற அடிக்கடையில் சந்தேகம் எழுந்திருப்பது குறித்து கேட்கப்பட்டதற்கு, மருத்துவமனையில்  அவருக்கு மிகச் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. புது தில்லி  எய்ம்ஸ் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் சிறந்த மருத்துவர்களை அழைத்து வந்து சிகிச்சை அளித்தோம். மருத்துவமனை தரப்பில் மிகச் சிறந்த பணியை செய்தோம். அனைத்து விவரங்களையும் முழுமையாகப் பார்க்கும் போது, அவருக்கு இருந்த பல உடல் நலப் பிரச்னைகள் சரி செய்யப்பட்டன என்றார் ப்ரீதா ரெட்டி.

சிகிச்சையின் போது அவருடன் யார் இருந்தார்கள் என்று கேட்டதற்கு, ஒவ்வொரு நோயாளிக்கும், தங்களை யார் சந்திக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் உரிமை இருந்தது. அந்த வகையில், ஜெயலலிதா விரும்பியவர்கள் மட்டுமே அவருடன் இருந்தனர் என்று பதிலளித்துள்ளார்.

அவரது கைரேகையைப் பெற்ற போது அவர் சுயநினைவுடன் இருந்தாரா என்ற கேள்விக்கு, இந்த கேள்விக்கு என்னால் பதிலளிக்க முடியாது, அப்போது நான் மருத்துவமனையில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com