போக்குவரத்துத் தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்

சென்னையில் நடைபெற்று வந்த காத்திருப்புப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக போக்குவரத்து தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அறிவித்ததால், அதிருப்தி அடைந்த தொழிலாளர்கள், சென்னை பல்லவன் இல்லம் முன்
போக்குவரத்துத் தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்

சென்னையில் நடைபெற்று வந்த காத்திருப்புப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக போக்குவரத்து தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அறிவித்ததால், அதிருப்தி அடைந்த தொழிலாளர்கள், சென்னை பல்லவன் இல்லம் முன் வெள்ளிக்கிழமை மாலை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்னை அண்ணா சாலை - சென்ட்ரல் மார்க்கத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போக்குவரத்து அலுவலகங்கள் முன் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டத்தை வியாழக்கிழமை தொடங்கினர். வெள்ளிக்கிழமையும் இப்போராட்டம் தொடர்ந்தது.
இந்நிலையில் மாலை 4.45 மணி அளவில் சென்னை, பல்லவன் இல்லம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களிடத்தில் ஒலிபெருக்கி மூலம் தொமுச, சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள், காத்திருப்புப் போராட்டத்தை திரும்பப் பெறுவதாகவும், வரும் 27, 28 -ஆம் தேதிகளில் ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும்அறிவித்தனர்.
இதனால் அதிருப்தியடைந்த தொழிலாளர்கள், இம்முடிவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகள் உடைக்கப்பட்டன. தொழிற்சங்கக் கொடிகள் கிழித்தெறியப்பட்டன. சாலையின் குறுக்கே ஏராளமான தொழிலாளர்கள் நின்று மறியலில் ஈடுபடத் தொடங்கினர்.
பேருந்து கண்ணாடி உடைப்பு: இதனால் அண்ணா சாலையிலிருந்து சென்ட்ரல், சென்ட்ரலிலிருந்து அண்ணாசாலை வழியாக பிற இடங்களுக்குச் செல்லும் அனைத்து வாகனங்களின் போக்குவரத்தும் ஸ்தம்பித்தன. விவேகானந்தர் இல்லத்திலிருந்து கொருக்குப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்த மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்தின் ( 32பி) முன்பக்க கண்ணாடி தொழிலாளர்களின் தாக்குதலில் சேதமடைந்தது. அதையடுத்து அப்பேருந்து பயணிகள் அனைவரும் பல்லவன் இல்லம் முன் இறக்கி விடப்பட்டனர்.
தொழிலாளர்கள் ஆதங்கம்: போக்குவரத்துத் தொழிலாளர்கள் வரலாற்றில் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு இதுவரை தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக 15 -க்கும் மேற்பட்ட முறை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு காணாமல் இருப்பது துரதிருஷ்டமானது. அரசுக்கு சாதகமாக செயல்படும் தொழிற்சங்க நிர்வாகிகள், தங்களது பொறுப்புகளில் இருந்து விலக வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் ஆவேசத்துடன் கூறினர்.
சமாதானம்: இதனிடையே, சென்னை பெருநகரக் கூடுதல் காவல் ஆணையர் சாரங்கன் தலைமையில் காவல்துறை உயரதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதையடுத்து போக்குவரத்துத் தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மாலை 6.30 மணிக்கு மேல் அப்பாதையில் போக்குவரத்து சீரடைந்தது.

கோரிக்கைகள் தொடர்பாக டிச.27, 28-இல் அமைச்சருடன் பேச்சுவார்த்தை

போக்குவரத்துத் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 10 தொழிற்சங்கக் கூட்டமைப்புப் பிரதிநிதிகள், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 
அதன் பின்னர் தொழிற்சங்க நிர்வாகிகள் கூறும்போது, "தற்போது ஆர்.கே. நகர் தேர்தல் காரணமாக, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், இத்தேர்தல் முடிந்த பின்னர் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக வரும் 27,28 ஆகிய தேதிகளில் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி, ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் இறுதி செய்வதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உறுதி அளித்துள்ளார்' என அவர்கள் தெரிவித்தனர்.

40 % பேருந்துகள் இயங்கவில்லை

கடந்த இரு நாள்களாகப் போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் முதல்நாளான வியாழக்கிழமை (டிச.14) அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்டவற்றைச் சேர்ந்த தொழிலாளர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால், இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை போக்குவரத்துத் தொழிலாளர்கள் பெருமளவில் பணிமனைக்குச் செல்லவில்லை. இதனால் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளில் 40 சதவீதத்துக்கும் அதிகமானவை இயங்கவில்லை. இதன் காரணமாக, காலையில் பணிக்குச் செல்வோர் பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.
மேலும், காலை 10 மணிக்கு மேல் சென்னையில் பெரும்பாலான பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் மாலையில் பள்ளிகளில் இருந்து வீடு திரும்பிய மாணவர்கள், ஆசிரியர்கள், பணிக்குச் சென்று வீடு திரும்புவோர் ஆங்காங்கே பேருந்து நிலையங்களில் நீண்ட நேரம் காத்துக் கிடந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com