அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய ரெளடிகள் பட்டியல்: புதுவை ஆளுநர் உத்தரவு

அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய ரெளடிகளின் பட்டியலை தயாரிக்க புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள ரெளடி செந்தில் வீட்டருகே சனிக்கிழமை ஆய்வு செய்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள ரெளடி செந்தில் வீட்டருகே சனிக்கிழமை ஆய்வு செய்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி.

அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய ரெளடிகளின் பட்டியலை தயாரிக்க புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி, தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த ரௌடி செந்தில் தற்போது கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். அவர் கதிர்காமம் தொழிலாளர் நலத் துறைக்கு அருகே தனது பெயரில் இருந்த இடத்தை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டு மனைகளாகப் பிரித்து விற்றுள்ளார். தற்போது இந்த இடத்தின் மதிப்பு ரூ. 28 கோடிக்கு மேல் இருக்கும். 
வீட்டுமனைகளை வாங்கியவர்களில் சிலர் வீடுகளைக் கட்டினர். ஆனால், அவ்வாறு வீடு கட்டியவர்களை குடியேறாத வகையில் மிரட்டி, அந்த இடத்தை மீண்டும் தனக்கே வழங்கிவிட்டு வெளியேறுமாறு செந்தில் கூறினாராம். யாரும் அந்தப் பகுதிக்குள் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக அங்கு கதவும் அமைத்தாராம். அங்கு இடம் வாங்கியவர்களில் தமிழக காவல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற, சென்னை பெருங்குடி திருமலை நகரைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ரத்தினவேலும் (59) ஒருவர்.
இந்த நிலையில், இதுகுறித்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பாதிக்கப்பட்டவர்கள் ஆளுநர் கிரண் பேடியிடம் புகார் செய்தனர். இதையடுத்து, ஆளுநர் வார இறுதி நாள்களில் மேற்கொள்ளும் கள ஆய்வுப் பணியை சனிக்கிழமை காந்தி நகரில் நடத்தினார். தன்னுடன் அவர் பாதிக்கப்பட்டவர்களையும், அதிகாரிகளையும் அழைத்துச் சென்றார்.
காந்தி நகரில் தட்டாஞ்சாவடி செந்தில் ஆக்கிரமித்த இடத்தின் பிரதான கதவை திறந்து வீட்டுமனை வாங்கியவர்களை உள்ளே அழைத்துச் சென்று, அவரவர் கட்டிய வீடுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
மேலும், யார் தடுத்தாலும் புகார் தெரிவிக்கலாம் என்றும், இதனைத் தடுக்கும் ரெளடிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆளுநர் உறுதியளித்தார்.
பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியது:
ஆளுநர் மாளிகை புகார்களைப் பெறும் அஞ்சல் நிலையம் அல்ல. புகார்கள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நில அபகரிப்பு தொடர்பான காவல் நிலையத்தில் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். புகார்களில் அரசியல் பிரமுகர்கள் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களையும் பராபட்சமின்றி குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும். அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய ரெளடிகளின் பட்டியலைத் தயாரிக்க முதுநிலைக் காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார் ஆளுநர் கிரண் பேடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com