கழிவுகள் கலந்து நிறம் மாறி மாசுபட்டுக் காணப்படும் ஆழியாற்று நீர். இடம்: ஆனைமலை.
கழிவுகள் கலந்து நிறம் மாறி மாசுபட்டுக் காணப்படும் ஆழியாற்று நீர். இடம்: ஆனைமலை.

ஆழியாற்றில் கலக்கும் கழிவுநீர்: கேள்விக்குறியாகும் 15 லட்சம் மக்களின் சுகாதாரம்

கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள ஆழியாற்றில் தினமும் பல லட்சம் லிட்டர் கழிவுநீர் கலப்பதால் 15 லட்சம் மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.

கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள ஆழியாற்றில் தினமும் பல லட்சம் லிட்டர் கழிவுநீர் கலப்பதால் 15 லட்சம் மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.
பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்டத்தில் (பிஏபி) உள்ள முக்கிய அணையான ஆழியாறு அணை, கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கிவருகிறது. தென்மேற்குப் பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழைக் காலங்களில் கிடைக்கும் தண்ணீரை சேமித்து வைத்து விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
ஆழியாறு அணையில் எப்போதுமே தண்ணீர் இருப்பதால், குடிநீருக்கு தண்ணீர் வழங்குவதில் சிக்கல் ஏற்படுவதில்லை. அணையில் இருந்து சுத்தமான தண்ணீர் குடிநீருக்காகத் திறந்துவிடப்பட்டாலும், ஆற்றில் பல இடங்களில் கழிவுநீர் கலப்பதால் சுத்தமான குடிநீரை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யமுடிவதில்லை.
கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள்: கம்பாலபட்டி கூட்டுக் குடிநீர்த் திட்டம், கோட்டூர் பேரூராட்சி, ஆனைமலை பேரூராட்சி, வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சி, ஒடையகுளம் பேரூராட்சி, சமத்தூர் பேரூராட்சி, ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி, பொள்ளாச்சி நகராட்சி ஆகிய பகுதிகளின் குடிநீர்த் திட்டங்கள், அம்பராம்பாளையம் குடிநீர்த் திட்டம், குறிச்சி- குனியமூத்தூர் கூட்டுகுடிநீர்திட்டம், கோவை மாவட்டத்தில் உள்ள 100-க்கும் அதிகமான ஊராட்சிகளின் குடிநீர்த் திட்டங்கள், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல ஊராட்சிகளின் குடிநீர்த் திட்டங்கள் என, இரண்டு மாவட்டங்களுக்கும் குடிநீர் ஆழியாற்றில் இருந்தே எடுக்கப்படுகிறது. 
இங்கிருந்து தினசரி கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. ஆழியாற்றில் எப்போதுமே தண்ணீர் இருப்பதால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படுவதில்லை. இவ்வாறு ஆண்டுமுழுவதும் தண்ணீர் வழங்கும் ஆழியாற்றில் கழிவுநீர் கலப்பது மிகப் பெரிய சுகாதாரப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. 
கழிவுநீர் கலக்கிறது:
கோட்டூர் பேரூராட்சி, ஆனைமலை பேரூராட்சி, ஒடையகுளம் பேரூராட்சி, வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சி, காளியாபுரம் ஊராட்சி, அம்பராம்பாளையம் ஊராட்சி, சுப்பேகவுண்டன்புதூர் ஊராட்சி, மாசாணியம்மன் கோயில் ஆகியவற்றின் கழிவுகள் நேரடியாக ஆழியாற்றில் கலந்துவிடப்படுகிறது. 
ஆழியாற்றில் இருந்து குடிநீர் எடுக்கும் இந்த நிர்வாகங்களே, பொதுமக்கள் பயன்பாட்டுக்குப் பிறகு சாக்கடை வாயிலாக அதை கழிவுநாராக ஆழியாற்றில் கொண்டுவந்து கலந்துவிடுகின்றன. 
இவ்வாறு தினமும் லட்சக்கணக்கான லிட்டர் கழிவுநீர் ஆழியாற்றில் கலக்கிறது. செப்டிக் டேக்க் கழிவுகள், சிறுநீர், சோப்புநீர் உள்ளிட்ட பலவிதமான கழிவுகள் ஆழியாற்றில் கலந்துவிடப்படுகின்றன. கழிவுகளால் ஆழியாற்றில் ஆகாயத்தாமரை அதிக வளர்ந்து காணப்படுகிறது. 
இதுதவிர, கோழிக்கழிவுகள், உயிரிழக்கும் நாய்கள் போன்றவற்றையும் ஆற்றில் கொண்டுவந்து போட்டுவிடுகின்றனர். மாமிசக் கழிவுகளால் மேலும் ஆற்றுநீர் மாசுபடுகிறது. இந்த நீரை இப்படியே இரண்டு மாவட்ட மக்களுக்கு குடிநீராக வழங்குவதால் இதைப்பயன்படுத்தும் 15 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகிறது. 
பொதுமக்கள் ஆழியாற்றில் கழிவுநீர் கலப்பது பற்றி அதிகாரிகளிடமும், சட்டப்பேரவை உறுப்பினர்களிடமும், மக்களவை உறுப்பினர்களிடமும் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆண்டுமுழுவதும் தண்ணீர் தரும் ஆழியாறு சிறிது, சிறிதாக கூவம் நதிபோல மாறிவருகிறது. 
குறிப்பாக ஆனைமலையில் ஆழியாற்றைப் பார்த்தால் முழுமையாக கூவம் நதியாகவே மாறிவிட்டது போலத் தோன்றும். அந்த அளவுக்கு ஆனைமலை பகுதியில் ஆற்றுநீர் மாசுபட்டு, ஆகாயத்தாமரை நிறைந்தும், பாலிதீன் கழிவுகள் நிறைந்தும், கழிவுநீராகக் காணப்படுகிறது. 
தற்போது, ஆனைமலை பகுதி பொதுமக்கள் சார்பாக, ஆழியாறு மீட்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மீட்புக் குழு சார்பாக போராட்டம், ஊர்வலங்கள் என நடத்தப்படுகின்றன. பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டத்தில் சிறப்பு தலைமைப் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள இளங்கோவன் ஆழியாற்று நீரில் கழிவு நீர் கலக்காமல் இருக்க செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறார். 
ஆழியாறு மீட்புக் குழு (ஆனைமலை) ஒருங்கிணைப்பாளர்கள் அசோக்ராஜா, லட்சுமி நாராயணன் ஆகியோர் கூறுகையில், ஆழியாற்றில் பேரூராட்சிகள், ஊராட்சி நிர்வாகங்கள் கழிவுநீரைக் கலந்துவிடாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது சுத்திகரிப்பு நிலையம் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆழியாற்றை நம்பியுள்ளவர்களின் சுகாதாரம் பாதிக்கப்படும் என்றனர்.
ஆனைமலை முன்னாள் பேரூராட்சித் தலைவர் சாந்தலிங்ககுமார் கூறுகையில், ஆனைமலை பேரூராட்சித் தலைவராக நான் இருந்தபோது, சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசுக்கும், அமைச்சருக்கும் பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்கிறார். 
நதிகள் மீட்பு தொடர்பான விழிப்புணர்வு பெருகிவரும் சூழலில், ஆழியாறு கழிவுகளின் சங்கமமாக மாறி வருவது வேதனை அளிக்கிறது. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் முன், அரசும் உள்ளாட்சி நிர்வாகங்களும் தக்க நடவடிக்கை எடுக்குமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com