ஈரோடு, திருப்பூர், கோவையிலிருந்து திருச்செந்தூருக்கு அரசுப் பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுமா?

கொங்கு மண்டலத்தின் முக்கிய நகரங்களான ஈரோடு, கோவை, திருப்பூர், கோபி நகரங்களில் இருந்து திருச்செந்தூர் செல்லும் அரசுப் பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால், முருகப் பெருமானை தரிசிக்கச் செல்லும்
ஈரோடு, திருப்பூர், கோவையிலிருந்து திருச்செந்தூருக்கு அரசுப் பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுமா?

கொங்கு மண்டலத்தின் முக்கிய நகரங்களான ஈரோடு, கோவை, திருப்பூர், கோபி நகரங்களில் இருந்து திருச்செந்தூர் செல்லும் அரசுப் பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால், முருகப் பெருமானை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 
முருகப் பெருமான் வீற்றிருக்கும் திருச்செந்தூர் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பிரபலமானது. கொங்கு மண்டலத்தில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திருச்செந்தூர் சென்று வருகின்றனர். பலர் சொகுசு கார்களிலும், ரயில், ஆம்னி பேருந்துகளிலும் பயணிக்கின்றனர். ஆயினும் நடுத்தர மக்கள் அரசுப் பேருந்துகளையே பயன்படுத்துகின்றனர். தற்போது அதற்கு வேட்டு வைத்துள்ளது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்.
கொங்கு மண்டலத்தின் முக்கிய நகரங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, கோபிசெட்டிபாளையம் ஆகிய நகரங்களில் இருந்து தினமும் காலை, மாலை நேரங்களில் தலா 2 பேருந்துகள் வீதம் 8 பேருந்துகள் திருச்செந்தூருக்கு இயக்கப்பட்டு வந்தன. அதேபோல, திருச்செந்தூரில் இருந்து கொங்கு மண்டல நகரங்களுக்கு 8 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
இந்தப் பேருந்துகள் செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் திடீரென நிறுத்தப்பட்டுள்ளன. இந்தப் பேருந்துகள் திருச்செந்தூருக்குப் பதிலாக தூத்துக்குடி வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. படிப்படியாக இப்பேருந்துகளை நிறுத்த அரசு போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இரவு 7 முதல் 8 மணி வரை கொங்கு மண்டல நகரங்களில் இருந்து புறப்படும் இப்பேருந்துகள் விடியற்காலை 4 மணிக்குமேல் திருச்செந்தூர் கோயில் வாசல் பகுதி பேருந்து நிலையத்துக்குச் செல்வது வழக்கம். அதேபோல, கோயில் வாசலில் இருந்து தினமும் காலை 8 முதல் 10 மணிக்குள் வெவ்வெறு கால அட்டவணை நேரப்படி இந்தப் பேருந்துகள் கொங்கு மண்டலத்தில் உள்ள நகரங்களுக்கு மீண்டும் புறப்பட்டு வந்தன. 
இப்பேருந்துகள் மூலமாக பக்தர்கள் கோயிலுக்குச் சென்று சுவாமியை தரிசித்துவிட்டு ஊருக்குத் திரும்பிவர வசதியாகவும் இருந்தது. ஆனால், இப்போது தூத்துக்குடியில் இறங்கி வேறு பேருந்தைப் பிடித்து நெரிசலில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக, பக்தர்கள் புலம்புகின்றனர்.
பக்தர்களுக்கு மட்டுமன்றி கொங்கு மண்டலத்தில் தொழில், பணி நிமித்தமாக வாழும் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கும் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, அரசு போக்குவரத்துக் கழகத்தின் ஈரோடு மண்டல ஐஎன்டியூசி தொழிற்சங்கப் பொருளாளர் கே.ரவி கூறியதாவது:
இப்போது நிறுத்தப்பட்டுள்ள அனைத்துப் பேருந்துகளிலும் தினமும் குறைந்தபட்சம் 50 பயணிகள் திருச்செந்தூருக்குப் பயணம் செய்து வந்தனர். பண்டிகை நேரங்களில் 15 நாள்களுக்கு முன்னதாகவே அனைத்து பயணச்சீட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிடும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் படியில் அமர்ந்து செல்லும் அளவுக்கு பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். இந்தப் பேருந்துகளை ஏன் நிறுத்தினர் என்பது தெரியவில்லை. 
இதுகுறித்து கேட்டால் 400 கி.மீ. தொலைவுக்குமேல் செல்லும் பேருந்துகளில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் சரியாகப் பணியைச் செய்ய முடியவில்லை என்பதால், தொலைதூரப் பேருந்துகளை நிறுத்திவிட்டதாகக் கூறுகின்றனர். 
அப்படிப் பார்த்தால், ஈரோட்டில் இருந்து சென்னை, ராமேஸ்வரம் 400 கி.மீ. தொலைவு ஆகும். அதேபோல, அந்தியூரில் இருந்து நாகர்கோவில் 500 கி.மீ. தொலைவு ஆகும். இந்த வழித்தடங்களில் இப்போதும் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏதோ உள்நோக்கத்துடனேயே திருச்செந்தூருக்கு அரசுப் பேருந்துகளை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர் என்றார்.
இந்தப் பிரச்னை தொடர்பாக தொடர் போராட்டங்களை நடத்தப் போவதாக பல்வேறு அமைப்புகள் அறிவித்துள்ளன. தமிழக அரசும், போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் ஏழைப் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தப் பேருந்துகளை மீண்டும் திருச்செந்தூர் வரை இயக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பு.

அரசியல் பிரமுகர் காரணமா?

திருச்செந்தூர் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டது குறித்து அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் சிலர் கூறுகையில், திருச்செந்தூருக்கு அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டதற்கு அரசியல் பிரமுகர் ஒருவரே காரணம் என்றனர். அவர்கள் கூறியது:
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதி ஒருவரின் பினாமி பெயரில் கோவை, திருப்பூரில் இருந்து இப்போது திருச்செந்தூருக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருப்பூரில் புறப்படும் ஆம்னி பேருந்து, ஈரோடு வழியாக திருச்செந்தூர் செல்கிறது. தனியாருக்கு வசதியாக அரசுப் பேருந்துகளின் வழித்தடங்களைத் தாரை வார்க்கும் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் குறித்தும், தனியார் ஆம்னி பேருந்துகளை இயக்கும் பினாமிகள் குறித்தும் விரைவில் பட்டியல் வெளியிடுவோம் என்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com