காவேரிபாக்கம் அருகே சரக்கு ஆட்டோ - மினி லாரி மோதியதில் 3 பேர் சாவு

வேலூர் மாவட்டம், காவேரிபாக்கம் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சரக்கு ஆட்டோ, மினி லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். 
விபத்தில் உருக்குலைந்த சரக்கு ஆட்டோ.
விபத்தில் உருக்குலைந்த சரக்கு ஆட்டோ.

வேலூர் மாவட்டம், காவேரிபாக்கம் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சரக்கு ஆட்டோ, மினி லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். 
வேலூரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கறிக்கோழிகளை ஏற்றிக் கொண்டு சரக்கு ஆட்டோ ஒன்று சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. காவேரிபாக்கத்தை அடுத்த ஓச்சேரி அருகே சென்றபோது அதன்பின் பக்க டயர் திடீரென பழுதாகி வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரை தாண்டி எதிர்த்திசையில் புகுந்தது. அப்போது சென்னையில் இருந்து வேலூர் நோக்கி வந்த மினி லாரி எதிர்பாராதவிதமாக சரக்கு ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ கவிழ்ந்தது. இதனால் இரும்பு கூண்டுகள் சிதறி கோழிகள்சாலையில் விழுந்தன. 
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த ராணிப்பேட்டை யைச் சேர்ந்த தினா (எ)தினகரன் (45) ஆம்பூரைச் சேர்ந்த அன்சர் பாஷா (25) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 
பலத்த காயம் அடைந்த சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அக்பர்பாஷா (40) அவருடன் சென்ற ஆற்காட்டைச் சேர்ந்த அகமதுல்லா (24) மற்றும் மினி லாரி ஓட்டுநரான, குடியாத்தத்தைச் சேர்ந்த எபினேன் (30) ஆகிய 3 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அக்பர்பாஷா இறந்தார். 
இந்த விபத்து குறித்து காவேரிபாக்கம் காவல் ஆய்வாளர் சத்தியலிங்கம், அவளூர் காவல் உதவி ஆய்வாளர் சந்தோஷ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
இவ்விபத்து காரணமாக சென்னை-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com