ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தா?: ராஜேஷ் லக்கானி விளக்கம்

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக வெளியான வதந்திகளுக்கு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தா?: ராஜேஷ் லக்கானி விளக்கம்

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக வெளியான வதந்திகளுக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மறுப்புத் தெரிவித்துள்ளார். 

ஆர்.கே.நகர் தொகுதியில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சியினர். ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் பிரசாரம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலையுடன் ஓய்ந்தது. நாளை வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டது, பண மோசடி என்ற குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ஏற்கெனவே தேர்தல் ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதிக்கு, கடந்த மாதம் 24 ஆம் தேதி மீண்டும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நவ.27-ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் டிச. 4-இல் முடிவடைந்தது.

அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், சுயேச்சையாக டிடிவி தினகரன் உள்ளிட்டோர் களம் இறங்கியுள்ளனர். அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு ஆதரவாக, அந்தக் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் என பலரும் பிரசாரம் செய்தனர். பிரஷர் குக்கர் சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்ட டிடிவி தினகரனுக்கு நட்சத்திரப் பேச்சாளர்கள் என யாரும் இல்லாத போதும் அவரே அனைத்து இடங்களிலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 59 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பணம் பட்டுவாடா புகார்கள் என கடந்த சில நாட்களாக பரபரப்பு காணப்பட்ட நிலையில், அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்த நிலையில், நாளை வரை டாஸ்மாக் மதுக்கடைகளை மூட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. தொகுதியில் உள்ள வெளியூர் ஆட்கள் நேற்று மாலையுடன் வெளியேற உத்தரவிடப்பட்டிருந்ததால், திருமண மண்டபம், சமுதாய கூடம் மற்றும் தங்கும் விடுதிகளில் யாரேனும் தங்கியிருக்கிறார்களா என அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

ஆர்.கே.நகர் தொகுதி வாக்குப் பதிவுக்கு இப்போது தயாராகி வருகிறது. வாக்குப்பதிவுக்காக 258 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு தினத்தன்று காலை 6 மணிக்கு சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்படும். மாதிரி வாக்குகள் பதிவு செய்யப்பட்டு இயந்திரங்கள் சரிபார்க்கப்படும். இதைத் தொடர்ந்து, வாக்குப் பதிவு காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 24 ஆம் தேதியன்று ராணி மேரி கல்லூரியில் வைத்து எண்ணப்பட உள்ளன.

இடைத்தேர்தல் பாதுகாப்புக்காக 15 கம்பெனி துணை ராணுவப் படைகள் ஆர்.கே.நகருக்கு வந்துள்ளன. பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்பு பார்வையாளர்கள் தொகுதியை சோதனையிட்டு வருகின்றனர். 45 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. இருப்பினும், வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்வதற்காக என்றுகூறி 30 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணப் பட்டுவாடா புகார்கள் குறித்து, தமிழக தேர்தல் அதிகாரிகளிடம் தலைமைத் தேர்தல் ஆணையம் விளக்கம் கோரியது. 

இதையடுத்து, ஆர்.கே.நகர் தொகுதியில் ஆய்வு நடத்திய சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா நேற்று மதியம் 1.40 மணியளவில் தில்லி சென்று அறிக்கை அளித்துள்ளார். பணப் பட்டுவாடா புகார் குறித்து, அறிக்கை அளிப்பதற்காக, தில்லி சென்று உள்ளதால், இம்முறையும் பணப் பட்டுவாடா நடந்துள்ளதால் தேர்தல் ரத்தாகிறது என ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து தேர்தல் ரத்தானதாக சிலர் வதந்திகளைப் பரப்பி வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, அவ்வாறு வெளியாகும் தகவல்கள் தவறானவை என்று விளக்கம் அளித்துள்ளார். தேர்தல் ரத்தாகும் என்ற வதந்தியை நம்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com