ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவில் 77 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்டத் தேர்தல் அதிகாரி தா. கார்த்திகேயன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து காலியாக உள்ள ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத் தேர்தலை ஏப்.12-ஆம் தேதி நடத்துவதற்கு அறிவிப்பு வெளியானது. பணப் பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடு புகார்களின் அடிப்படையில் ஏப்.7-ஆம் தேதி அத்தேர்தல் ரத்தானது. 

இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. அதிமுக வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன், பாஜக வேட்பாளர் கரு. நாகராஜன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் உள்ளிட்ட 59 பேர் போட்டியிட்டனர்.

தேர்தல் பிரசாரம் டிசம்பர் 19-ந் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.  இதையடுத்து டிசம்பர் 21-ந் தேதி காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. 

வாக்குப்பதிவின் போது அசம்பாவிதங்களைத் தடுக்கும் விதமாக போலிஸார், தொகுதி முழுவதும் ரோந்து வாகனங்களில் சுற்றி வந்தனர். வாக்குப் பதிவு 'வெப்' கேமரா மூலம் தேர்தல் ஆணைய அலுவலர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.

வாக்குப் பதிவு நிறைவடையும் மாலை 5 மணியை நெருங்கிய நிலையில், வரிசையில் காத்திருந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். 5 மணிக்கு மேல் வந்த எந்த வாக்காளரும் வாக்குச் சாவடிகளுக்குள் அனுமதிக்கப்படவில்லை. வாக்குப் பதிவு இரவு 7.45 மணி வரை நீடித்தது.

இந்நிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி தா. கார்த்திகேயன், வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்றதாகவும், 77 சதவீதம் வாக்குகள் பதிவானதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து ஆர்.கே.நகர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 24-ந் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. 14 மேஜைகளில் 19 சுற்றுகளாக ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

ஓட்டு எண்ணும்போது அந்த எந்திரத்தில் பழுது ஏற்பட்டால், அதனுடன் இணைக்கப்பட்டிருந்த விவிபிஏடி எந்திரத்தில் (யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் எந்திரம்) உள்ள சீட்டுகள் எண்ணப்படும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com