தமிழகத்தில் 7 நதிகள் மாசடைந்துள்ளன ! மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வறிக்கை

தமிழகத்தில் 7 நதிகள் கடுமையாக மாசு அடைந்துள்ளன. நாடு முழுவதும் 275 நதிகள் மாசு அடைந்துள்ளன என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 7 நதிகள் மாசடைந்துள்ளன ! மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வறிக்கை

தமிழகத்தில் 7 நதிகள் கடுமையாக மாசு அடைந்துள்ளன. நாடு முழுவதும் 275 நதிகள் மாசு அடைந்துள்ளன என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
 தமிழகத்தில் உள்ள முக்கிய நதிகளான காவிரி, பாலாறு, பவானி, தாமிரபரணி, மணிமுத்தாறு உள்ளிட்டவை தொழிற்சாலை கழிவுகளால் மாசடைந்துள்ளதை வாரியம் சுட்டிக் காட்டியுள்ளது. இந்த நதிகள் அனைத்துமே விவசாயத்துக்கும், குடிநீருக்கும் ஆதாரமாக விளங்கி வருகின்றன.
 புனித நதி கங்கையின் நிலை?: புனித நதியாகப் போற்றப்படும் கங்கை, உலகிலேயே மிக அதிகமாக மாசு அடைந்த நதியாக மாறியுள்ளது. மனிதக் கழிவுகள், குப்பைகள், பாதி எரிக்கப்பட்ட சடலங்கள் என கங்கையில் சேர்ந்து வருவதால் அதன் மாசு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அத்துடன், காசி நகரின் சாக்கடை நீர் முழுமையாக கங்கையில்தான் கலக்கிறது. இதன் அளவு சுமார் 20 மில்லியன் காலன். பிகார் மாநிலத்தில் துர்க்காபூர், பொகாரோ, பிலாய், டாடா ஸ்டீல் நிறுவனம் ஆகிய தொழிற்சாலைகளில் இருந்தும், உரத் தொழிற்சாலைகளிலிருந்தும் அமோனியா, சயனைடு, நைட்ரேட் முதலிய நச்சுக் கழிவுகள் ஏராளமாக கலக்கின்றன. கொல்கத்தாவில் மட்டும் 296 தொழிற்சாலைகளின் ஒட்டுமொத்த கழிவுகளும் கலப்பது கங்கையில்தான்.
 கங்கை நதியைப் பாதுகாக்க கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் 4-இல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கங்கையை நாட்டின் தேசிய நதியாக அறிவித்தார். 2009 பிப்ரவரி 20-இல் தேசிய கங்கை நதி ஆணையம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதன்மூலம் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டம் உருவாக்கப்பட்டது. 2014-இல் ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி அரசு, கங்கையை தூய்மைப்படுத்தும் பணியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
 தமிழக நதிகளில் ரசாயன கலவைகளின் தாக்கம்: தமிழகத்தில் நதிகள் மாசடைவதற்கான முக்கிய காரணம் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன கலவைகள்தான் என கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, பவானி ஆற்றங்கரையில் பெரும்பாலும் பின்னலாடை, காகிதம் மற்றும் சர்க்கரை தொழிற்சாலைகள் உள்ளன. ஒரு கிலோ பின்னலாடையை உற்பத்தி செய்ய 2 கிலோ பெட்ரோலியம் எண்ணெய் தேவைப்படுகிறது. மேலும் இந்தத் தொழிலுக்கு 4 கிலோ காஸ்டிக் சோடா, சோடியம் பெராக்ûஸட், 8 கிலோ ஹைட்ரோ குளோரிக் அமிலம், சோடா ஆஷ், 750 கிராம் வைரபோஸ், 3 கிலோ அசிட்டிக் அமிலம், 10 கிலோ உப்பு ஆகியவையும் தேவையாக உள்ளது. மேலும் பின்னலாடை உற்பத்திக்கு ஏற்ப குறைந்தப்பட்சம் 40,000 லிட்டர் தண்ணீர் தேவை உள்ளது. இதில் உற்பத்தி முடிந்ததும் 90 சதவீதம் ரசாயனப் பொருள்கள் கழிவாக வெளியேற்றப்படுகின்றன. இதேபோல், 2 மெட்ரிக் கியூபிக் டன் சர்க்கரை உற்பத்தியில், 0.4 மெட்ரிக் கியூபிக் டன் கழிவுநீர் சேருகிறது.
 250 மெட்ரிக் கியூபிக் டன் காகிதம் உற்பத்திக்கு 175 மெட்ரிக் கியூபிக் டன் கழிவுநீர் சேருகிறது. இவை அனைத்தும் நதிகளில்தான் பெரும்பாலும் கலக்கின்றன.
 இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் கூறியது: ஒவ்வொரு நதிக்கும் உயிர்ச் சூழலுக்கான குறைந்தபட்ச நீரோட்டம் தேவை என்கிறது தண்ணீர் தர மதிப்பீட்டு ஆணையம். அது இருந்தால்தான் ஒரு ஆறு தன்னிச்சையாக சுத்தம் செய்துகொள்ள முடியும். அத்துடன் அது தனது நீரோட்டப் பாதையைக் காப்பாற்றிக் கொள்ளவும் முடியும். அத்துடன் அந்தந்த நதிகளில் உள்ள உயிரினங்களும் வாழ முடியும். நிலத்தடி நீரும் வற்றாமல் பார்த்துக் கொள்ள முடியும். நிலத்தடியில் உப்புத் தன்மை ஊடுருவாமல் பாதுகாக்கவும் முடியும்.
 கடந்த 1999-ஆம் ஆண்டு யமுனை நதி மாசடைவது தொடர்பான வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கும் கருத்து என்னவெனில், "புதுதில்லியை நோக்கிப் பாயும் யமுனை நதியில் உயிர்ச் சூழலுக்கான குறைந்தபட்ச நீரோட்டமாக வினாடிக்கு 10 கியூபிக் மீட்டர் தண்ணீர் பாய்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்' என்பதே. இந்த அளவை விட்டு கீழே இறங்கும்போதுதான் நதி மாசடைவதற்கான சூழல் தொடங்குகிறது என்றார் அவர்.
 தமிழகத்தில் மாசு அடைந்து வரும் நதிகள் பட்டியலை வெளியிட்டுள்ள மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், நதிகளை மீட்க அந்தந்த மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com