எங்கள் ஆதரவு அமைச்சர்களுக்கு வழிவிடுங்கள்: டிடிவி தினகரன் வேண்டுகோள்

தங்களது ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் அணியில் இணைவதற்கு வழிவிட வேண்டும் என்று டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்தார்.
எங்கள் ஆதரவு அமைச்சர்களுக்கு வழிவிடுங்கள்: டிடிவி தினகரன் வேண்டுகோள்

தங்களது ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் அணியில் இணைவதற்கு வழிவிட வேண்டும் என்று டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்தார்.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் பெயரைக் குறிப்பிடாமல், ஐந்து, ஆறு பேர் எனத் தெரிவித்தார். அவர்கள் தங்களது ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களை தங்களிடம் சேர விடாமல் தடுப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
தலைமைச் செயலக வளாகத்தில், பேரவைத் தலைவர் முன்னிலையில் சுயேச்சை எம்.எல்.ஏ.,வாக டிடிவி தினகரன் வெள்ளிக்கிழமை பதவியேற்றார். இதன் பிறகு, அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் இன்றைக்கு மாபெரும் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளனர். தேர்தலில் வாக்கு கேட்கச் சென்ற போது, அந்தத் தொகுதி ஜெயலலிதாவின் தொகுதி, அவருக்குப் பிறகு, அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்து செய்திடவும், தொகுதியின் வளர்ச்சிக்காக பணியாற்றிடவும் என்னை தேர்ந்தெடுக்கக் கேட்டேன்.
தமிழகத்தில் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற மக்கள் விரோத, துரோக ஆட்சியை, செயல்படாத ஆட்சியை ஒரு முடிவுக்குக் கொண்டு வர ஏழரை கோடி தமிழக மக்களும் எதிர்பார்த்த தேர்தல்தான், ஆர்.கே.நகர் தேர்தல்.
ஆர்.கே.நகர் மக்கள் ஏழரை கோடி தமிழக மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் எனக்கு வாக்களிக்கக் கேட்டேன். சசிகலா தலைமையில் இயங்கும் ஒன்றரை கோடி தொண்டர்களாகிய நாங்கள்தான் உண்மையான அதிமுக என்பது, ஆர்.கே.நகர் தேர்தல் மூலம் உலகுக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.
சின்னமும், கட்சியும் இருந்தால் மட்டும் போதாது. சின்னத்துக்கும், கட்சிக்கும் ரத்தமும், சதையுமாக இருப்பவர்கள் தொண்டர்கள்தான். அவர்கள் இருக்கும் இயக்கமே உண்மையான அதிமுக என்பதை ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் நிரூபித்துள்ளனர்.
இப்போது துரோகம் செய்து கொண்டிருப்பவர்கள் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் மூலமாக, தங்களை சுய பரிசோதனை செய்து பார்த்தால், அவர்களுக்கு உரிய விடை கிடைக்கும். துரோகத்துக்கு என்றைக்கும் வெற்றி கிடைத்தது இல்லை. ஆட்சி, அதிகாரம் இருக்கிறது என்பதற்காக, ஏற்றி வைத்த ஏணியை எட்டி உதைக்கும் தவறான செயலில் ஈடுபட்டனர்.
ஐந்து, ஆறு பேரின் தவறான எண்ணங்களால் மாபெரும் இயக்கம் இத்தனை சோதனைகளைச் சந்தித்து வருகிறது. யாருக்கோ கைகட்டி வாய் பொத்தி சேவகம் புரிவதால், ஆர்.கே.நகர் மக்கள் இந்தத் தீர்ப்பை வழங்கி அவர்களுக்கு பாடம் புகட்டியுள்ளனர்.
மனதளவில் எங்களுடனும், உடல் அளவில் அங்கும் நிறைய அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். உண்மையான அதிமுக யார் பக்கம் இருக்கிறது என்பதைத் தெரிந்தும், வேறு வழியில்லாமல் பதவிக்காக அங்கு இருக்கிறார்கள்.
உண்மையை உணர்ந்து, அந்த ஐந்து, ஆறு பேர் அவர்களின் சுயநலனுக்காக செயல்படுவதை விட்டுவிட வேண்டும்.
யார் யாரை நீக்குவது? கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டவர்களே மற்றவர்களை நீக்குகிறார்கள்.
தோல்விக்குப் பிறகு பயத்தில் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்கே புரியவில்லை. நீக்க நடவடிக்கைகளைப் பார்த்து மக்கள் சிரிக்கிறார்கள். தவறுகளைச் செய்யும் ஐந்து, ஆறு பேர் திருந்த வேண்டும்.
ஐந்து, ஆறு பேர் யார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்களுக்கு வடக்கில் உள்ளவர்கள் ஆதரவாக இருக்கிறார்கள். சின்னம், கட்சி கிடைத்திருப்பதாக பெருமை கொண்டார்கள். உயிரோட்டமான தொண்டர்கள் கட்சி அலுவலகத்தில் இல்லை. அவர்களுடன் அவர்களால் பயன் பெற்ற சிலர் மட்டுமே இருக்கின்றனர். துரோகம் செய்த அவர்கள், சிந்தித்துப் பார்க்க வேண்டும். மனதார வர நினைக்க இருப்பவர்களை கட்டிப் போடக் கூடாது. எங்களை ஆதரிப்பவர்கள் எங்களை நோக்கி புறப்பட்டு விட்டார்கள். அவர்களுக்கு வழிவிட்டால் வருங்காலம் அந்த ஐந்து, ஆறு பேரை மன்னிக்கும்.
மனதை எங்களிடமும், உடலை அங்கேயும் வைத்திருப்பவர்களை நீண்ட நாள்களுக்கு தடுக்க முடியாது. அவர்களே அனுப்பி வைக்க வேண்டும். அதன்மூலம், துரோகத்தில் இருந்து மீண்டு விட்டார்கள் என்ற பெயராவது அந்த ஐந்து, ஆறு பேருக்கு ஏற்படும்.
நல்ல தீர்ப்பு வரும்: 18 எம்.எல்.ஏ.,க்கள் நீக்கப்பட்டது தொடர்பான வழக்கில் ஜனவரி இறுதிக்குள் தீர்ப்பு வரும் என நம்புகிறோம். அப்படி இல்லாவிட்டால், பிப்ரவரி, மார்ச்சில் பட்ஜெட் நடைபெறும் போது எங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு கிடைக்கும். ஐந்து, ஆறு பேர் வழிவிட்டால் மற்றவர்கள் எங்களுடன் வருவார்கள். அதன்பின், ஆட்சியை எப்படி நடத்த வேண்டும் என்பது எங்களுக்குத் தெரிய வரும்.
கட்சி மட்டுமல்ல, தமிழக மக்களும் எங்களுடன்தான் இருக்கிறார்கள். ஆட்சி மாற்றத்துக்காக வாக்களியுங்கள் என ஆர்.கே.நகர் மக்களிடம் வாக்குக் கேட்டேன். மக்கள் எங்களுக்கு வாக்களித்து மாபெரும் வெற்றியைத் தந்துள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதியில் புத்தாண்டுக்குப் பிறகு, ஜனவரி முதல் வாரத்தில் தொகுதி மக்களுக்கு நன்றி செலுத்துவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com