மத்திய தொழிற்பாதுகாப்புப் படையில் மகளிருக்கு விரைவில் 33% ஒதுக்கீடு: ஓ.பி.சிங் தகவல்

மத்திய தொழிற்பாதுகாப்புப் படையில் மகளிருக்கு விரைவில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என அதன் தலைவர் ஓ.பி.சிங் தெரிவித்தார்.
மத்திய தொழிற்பாதுகாப்புப் படையில் மகளிருக்கு விரைவில் 33% ஒதுக்கீடு: ஓ.பி.சிங் தகவல்

மத்திய தொழிற்பாதுகாப்புப் படையில் மகளிருக்கு விரைவில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என அதன் தலைவர் ஓ.பி.சிங் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த நகரிகுப்பத்தில் மத்திய தொழிற்பாதுகாப்புப் படையின் மண்டல பயிற்சி மையம் உள்ளது. இங்கு 782 பெண் காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்று படையின் தலைவர் ஓ.பி.சிங் பேசியதாவது:
கடந்த 1969-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மத்திய தொழிற்பாதுகாப்புப் படை, நாட்டில் உள்ள அனைத்து அரசு சொத்துகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதோடு மட்டுமல்லாமல் தனியார்களுக்கும் பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கி வருகிறது. தனியாருக்கு பாதுகாப்பு ஆலோசனை வழங்குவதன் மூலம் கடந்த ஆண்டில் ரூ. 2.54 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இப்படையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள படை வீரர் பணியிடங்கள் உள்பட மொத்தம் 1.80 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். மேலும், இந்த ஆண்டு மட்டும் 19 ஆயிரம் பேருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு படையில் இணைக்கப்பட்டுள்ளனர். மத்திய தரச் சான்றிதழ் நிறுவனத்தில் ஏவியேஷன் செக்யூரிட்டியில் மத்திய தொழிற்பாதுகாப்புப் படை சிறந்த நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் சிவகங்கையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 112 படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வீரர்கள் விரைவில் அரக்கோணத்தில் உள்ள மண்டல பயிற்சி முகாமுக்கு மாற்றப்பட்டு, அங்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 
அரக்கோணத்தில் 1,800 மகளிர் படை காவலர்கள் பயிற்சியில் உள்ளனர். இதில், 782 பேருக்கு பயிற்சிகள் வெள்ளிக்கிழமை நிறைவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 5,949 படை வீரர்கள் படையில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் 12,650 பேர் இணைக்கப்பட உள்ளனர். இதனால் இப்படையில் காலிப் பணியிடங்கள் இல்லாத நிலை உருவாகும் என்றார்.
விழாவுக்கு பயிற்சி மைய முதல்வரும், டிஐஜியுமான காமோ தலைமை வகித்தார். இதில், அனைத்து பயிற்சிகளிலும் சிறப்பாகச் செயல்பட்ட சப்னா ஜெய்ஸ்வால், உள்ளரங்க பயிற்சிகளில் சிறப்பாகச் செயல்பட்ட பூனம், மைதான பயிற்சிகளில் சிறந்து விளங்கிய தீபாஞ்சலி கோஷ், துப்பாக்கி சுடுதலில் சிறந்து விளங்கிய சுவாதிகிரி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், அணிவகுப்பில் சிறப்பாகச் செயல்பட்ட பெரேட் கமாண்டர் பிங்கி லாராவுக்கு மைய முதல்வரின் கோப்பை வழங்கப்பட்டது. 
முன்னதாக பெண் படை வீரர்களின் அணிவகுப்பை படையின் தலைவர் ஓ.பி.சிங் ஏற்றுக் கொண்டார். விழாவில் ஐ.ஜி. (பயிற்சிப் பிரிவு) ஜக்பீர் சிங், ஐ.ஜி. (தெற்கு) ஆனந்த் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com