பெண்களை கல்வி கற்கத் தூண்டும் தாலிக்கு தங்கம் திட்டம்

பெண்களின் சமுதாய முன்னேற்றத்திற்கு, கல்வி மிக முக்கியம். அந்த கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், குறிப்பாக

பெண்களின் சமுதாய முன்னேற்றத்திற்கு, கல்வி மிக முக்கியம். அந்த கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், குறிப்பாக ஆண்களுக்கு சமமாக பெண்களும் கல்வி கற்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திலும், பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அத்திட்டங்களுள் ஒன்று சமூக நலத்துறையின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும், ஏழை எளிய பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்.
இத்திட்டத்தின் கீழ், ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு 4 கிராம் தங்கம் மற்றும் 10ஆம் வகுப்பு படித்த பெண்களுக்கு ரூ.25ஆயிரமும், பட் டய படிப்பு படித்தவர்களுக்கு 4 கிராம் தங்கத்துடன் ரூ.50ஆயிரமும் வழங்கப்பட்டு வந்தது.
கடந்த 2016ஆம் ஆண்டு தொடர்ச்சியாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்குவதற்கான உத்தரவினை பிறப்பித்தார்.
அதன்படி, குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு மற்றும் பட்டயப்படிப்பு படித்திருக்க வேண்டும் என்ற அடிப்படை தகுதி உருவாக்கப்பட்டுள்ளதோடு, தமிழக பெண்கள் பட்டப்படிப்பு வரை கற்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் தூண்டியுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட சமூக நலத்துறையின் மூலம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், ஈ.வே.ரா.மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம் மற்றும் டாக்டர் முத்துலட்சுமிரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ், நடப்பாண்டில் மொத்தம் 200 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியாக ரூ.75.75 லட்சம் நிதியுதவி, தாலிக்கு 8 கிராம் தங்கம் வீதம் 1600 கிராம் தங்கம் ரூ.49.43 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது.
மொத்தம் ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்கு 8 கிராம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இத்திட்டத்தின் கீழ் 2017-18 ஆம் நிதியாண்டில் சுமார் 2000 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த பயனாளிகளில் திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மூணான்டிபட்டியைச் சேர்ந்த அறிவுத்தாய் கூறியது:
நாங்கள் கூலி வேலை செய்து வருகிறோம். எனது மகள் திருமணத்தை பெரிய அளவில் நடத்துவதற்கான சூழ்நிலை மற்றும் எனது மகளுக்குத் தேவையான அடிப்படை சீர்வரிசை செய்திட போதுமான வசதி இல்லை.
இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டமான திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் மூலம் பயன்பெறுவதற்காக விண்ணப்பித்தோம். அதன்படி மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தின் மூலம் எனது மகள் ஆர்.சசிகலா பயனடைந்துள்ளார். பட்டயப்படிப்பு படித்து முடித்த அவருக்கு திருமண உதவியாக 8 கிராம் தங்கமும், ரூ.50ஆயிரம் நிதியுதவியும் கிடைத்தது.
தமிழக அரசு எங்களது சூழ்நிலைக்கேற்ப இந்த நேரத்தில் கொடுத்த நிதியுதவி மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றார்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்துள்ள ஆனந்தநகரைச் சார்ந்த க.செல்லையா கூறியதாவது: பிளஸ் 2 வரை படித்து முடித்துள்ள எனது மகளின் திருமணத்திற்கு, தமிழக அரசு செயல்படுத்தும் திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தோம்.
8 கிராம் தங்கமும், ரூ.25 ஆயிரமும் தமிழக அரசின் மூலம் கிடைத்தது. இதன் மூலம் நாங்கள் பெற்றிருந்த கடன் மற்றும் இதர செலவுகளை சரி செய்வதற்கு இந்த நிதியுதவி மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com