அதிமுக-திமுகவினரிடையே கூச்சல், குழப்பம்: அவை நடவடிக்கைகள் 15 நிமிஷங்களுக்கு முடக்கம்

அதிமுக - திமுக எம்எல்ஏக்களிடையே ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தால் அவை நடவடிக்கைகள் 15 நிமிஷங்களுக்கு மேல் முடங்கின.

அதிமுக - திமுக எம்எல்ஏக்களிடையே ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தால் அவை நடவடிக்கைகள் 15 நிமிஷங்களுக்கு மேல் முடங்கின.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, "ஆழ்கடல் மீன் பிடிப்பு திட்டத்துக்காக மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியிருந்த ரூ.1,520 கோடி நிதியை இதுவரை பெறவில்லை. இந்த நிதியைக் கேட்டு ஆளுநர் உரையில் வலியுறுத்தவும் இல்லை' என்றார்.
அப்போது முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறுக்கிட்டுப் பேசியது: "ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டமே திமுக ஆட்சியில் கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டதால்தான் ஏற்படுத்தப்பட்டது. தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை இதனால் பறிபோனது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்குத்தான் உரியதான் கச்சத்தீவு என்பதை என்பதை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து, அதை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன்: தமிழக அரசுக்கு (திமுக ஆட்சி) தெரியாமலே மத்திய அரசு இலங்கைக்கு கச்சத்தீவை அளித்தது. இது தொடர்பாக அப்போதே கருணாநிதி கண்டனம் தெரிவித்தார். ஆனால், பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது இலங்கைக்கு கச்சத்தீவைத் தாரை வார்த்ததில் எனக்கு வருத்தம் எதுவும் இல்லை என்று ஜெயலலிதா கடிதம் எழுதினார் என்றார்.
இதற்கு அமைச்சர் டி.ஜெயகுமார் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்க, திமுக உறுப்பினர்கள் எழுந்து அமைச்சருக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து அதிமுகவின் உறுப்பினர்களும் எழுந்து குரல் கொடுத்தனர்.
பேரவைத் தலைவர் தனபாலின் கட்டுப்பாட்டை மீறி, அதிமுக - திமுக உறுப்பினர்கள் நேரடியாக மாறிமாறி பேசிக் கொள்ளத் தொடங்கினர்.
பேரவைத் தலைவர் தனபால்: அமைதியான முறையில் விவாதம் செல்கிறது. எதிர்க்கட்சியினர் கேட்கும் சில கேள்விகளுக்கு அமைச்சர்கள் சிலர் பதில் அளிக்க வாய்ப்பு கேட்கின்றனர். அவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது என் கடமை.
துரைமுருகன்: நீங்கள் குறிப்பிட்டதில் எள்ளளவும் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: திமுக ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதா பேசியபோது அமைச்சர்கள் 32 தடவை குறுக்கிட்டனர் என்றார். பேரவைத் தலைவரும் அதே கருத்தைத் தெரிவித்தார்.
இதற்கிடையில் அதிமுக-திமுக உறுப்பினர்கள் மாறிமாறி பேசிக் கொள்ளத் தொடங்கினர். அப்போது ஜெயலலிதாவின் பெயரை துரைமுருகன் கூறியதற்கு அமைச்சர் டி.ஜெயகுமார் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவருடன் நேரடியாக விவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அதிமுக - திமுக உறுப்பினர்கள் கடினமான வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர். மேலும், அடிக்கப் போவதுபோன்ற ஆக்ரோஷமான செயல்களில் ஈடுபட்டனர். இதனால் பேரவைத் தலைவரால் அவையைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது. அப்போது மு.க.ஸ்டாலின் அமைச்சர் ஒருவரின் சமிக்ஞை தொடர்பாக பேரவைத் தலைவரிடம் புகார் கூறினார்.
அதன் பிறகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து பேசியது: சிலரின் சமிக்ஞை தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டது. அது தொடர்பாக விசாரித்து உரிய தண்டனை அளிக்கப்படும் என்றார். பேரவைத் தலைவரும் உறுப்பினர்களின் சமிக்ஞை செயல்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாகக் கூறினார். அதன் பிறகு, பேரவை அமைதியானது. இந்த விவகாரத்தால் அவை நடவடிக்கைகள் சுமார் 15 நிமிஷங்கள் முடங்கின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com