சட்டப்பேரவையில் சசிகலாவை புகழ்ந்து பேசுவது தான் தொடர்ந்து நடக்கிறது: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

சட்டப்பேரவையில் சசிகலாவை புகழ்ந்து பேசுவது தான் தொடர்ந்து நடக்கிறது என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவையில் சசிகலாவை புகழ்ந்து பேசுவது தான் தொடர்ந்து நடக்கிறது: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

சட்டப்பேரவையில் சசிகலாவை புகழ்ந்து பேசுவது தான் தொடர்ந்து நடக்கிறது என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் ஆளுநரின் உரை மீது, நேற்றைய தினம் நிகழ்த்திய உரையில் இருந்த ஒரு வார்த்தை, இன்று (01-02-2017) அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை கண்டித்து, மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவையில் இருந்து தற்காலிகமாக வெளிநடப்பு செய்தனர்.

இதுகுறித்து மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:

நேற்றைய தினம் சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீது நடைபெறக்கூடிய விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் பங்கேற்று உரையாற்றி இருக்கிறேன். அப்போது நான் எடுத்துச் சொன்ன ஒரு வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று மாண்புமிகு கைத்தறி துறையின் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் குறிப்பிட்டுச் சொல்லி, அதோடு நிறுத்தாமல், ’விஷத்தை கக்கியிருக்கிறேன்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி சபாநாயகரிடத்தில் அவர் எடுத்து வைத்து, அதனைத் தொடர்ந்து சபாநாயகர், நான் எடுத்து வைத்திருந்த உரையில் இருந்து ஒரு வார்த்தையை நீக்கினார்.

எனது உரையில் நான் எடுத்து வைத்திருந்த வார்த்தை என்னவென்று கேட்டால், ’தமிழகத்தை பொறுத்தவரை நல்ல பொறுப்புள்ள நிர்வாகம் அந்நியப்பட்டு போய் ஆண்டுகள் பல ஆகி விட்டன’ என்பது. அதாவது ’பட்டுப்போய்’ என்ற வார்த்தையை நான் பயன்படுத்தக்கூடாது, அது அவையில் பயன்படுத்தக் கூடாதது என்ற நிலையில், அதனை நீக்கினார்கள். இதற்கு நாங்கள் கடுமையான ஆட்சேபணை தெரிவித்தோம். உடனே அதற்கு சபாநாயகர் ’பட்டுப்போய்’ என்ற வார்த்தையை நீக்குகிறோம், அதேபோல அமைச்சர் என்னை ’விஷத்தை கக்குகிறார்’ என்று சொன்ன சொல்லையும் நீக்குகிறோம் என்று தீர்ப்பளித்தார்.

அதன் பிறகு நாங்கள் இதை பெரிய பிரச்னையாக ஆக்காமல், சட்டப்பேரவையில் இன்று காலையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு, நேரமில்லா நேரத்தை பயன்படுத்தி, ’பட்டுப்போய்’ என்ற வார்த்தையை நீங்கள் நீக்கியது சரியல்ல, ’விஷத்தை கக்குகிறார்’ என்ற வார்த்தையை நீக்குவதற்காக அந்த வார்த்தையை நீக்குவதாக நீங்கள் நீக்குவது என்றால், தயவுசெய்து ‘விஷத்தை கக்குகிறார்’ என்ற வார்த்தையையும் கூட அவைக்குறிப்பில் இருந்து விட்டுப் போகட்டும், நான் கவலைப்படவில்லை. எனவே, ’பட்டுப்போய்’ என்ற வார்த்தை சட்டப்பேரவையில் பயன்படுத்தக் கூடாத வார்த்தையல்ல, எனவே அது இருப்பதில் தவறில்லை, எனவே அந்த வார்த்தை அவைக்குறிப்பில் இருக்க வேண்டும், என்று நேரமில்லா நேரத்தில் நான் வலியுறுத்தி, வற்புறுத்திக் கேட்டேன்.

அதுமட்டுமல்ல, இதே சட்டப்பேரவையில் கடந்த 2010 ஆம் ஆண்டு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, இதே அவையில், இதைவிட மோசமாக பேசியிருக்கிறார். நானாவது, ’நல்ல பொறுப்புள்ள நிர்வாகம் அந்நியப்பட்டு போய்’ என்று சொன்னேன். ஆனால் அம்மையார் ஜெயலலிதா சட்டப்பேரவையில் பேசுகிறபோது, ‘திமுக அரசு தமிழ்நாட்டை அதாள பாதாளத்திற்கு அழிவுப் பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது’ என்று சொல்லி, அது அவைக்குறிப்பிலும் இருக்கிறது. இதையும் நான் அவையில் படித்துக் காட்டினேன். ஆக, அதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், இது ஒன்றுமே அல்ல. எனவே, அது சபைக்குறிப்பில் இருக்க வேண்டுமென்று நாங்கள் எவ்வளவோ வற்புறுத்தினோம். சபாநாயகர் கேட்க வில்லை. ‘நான் அளித்த தீர்ப்பு, இறுதி தீர்ப்பு’ என்று சொல்லிவிட்டார். ஆகவே, இதை நாங்கள் ஏற்றுக் கொள்ளாத சூழ்நிலையில், எங்கள் கண்டனத்தை இதற்கு தெரிவிக்கும் வகையில், நாங்கள் இன்றைக்கு வெளிநடப்பு செய்திருக்கிறோம்.

அதுமட்டுமல்ல, மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., இதே அவையில், ‘சட்டமன்றம் செத்து விட்டது’, என்றார். ’ஆட்சியல்ல, நிர்வாகமல்ல, சட்டமன்றமே செத்து விட்டது என்று அவர் சொன்னது இன்றும் அவைக்குறிப்பில் இடம்பெற்றுள்ளது. ஆக, அதையெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ’பட்டுப்போய்’ என்று சொல்வது சாதாரண விஷயம் தான். பட்டுப்புடவை என்று சொல்கிறோம், பட்டுப்பாவாடை என்று சொல்கிறோம், பட்டு வேட்டி – பட்டுச்சட்டை என்று சொல்கிறோம், அதெல்லாம் அவைக்குறிப்பில் இருக்கக்கூடாதா? ’கேட்டுக் கொள்ளப்பட்டு, தெரிவிக்கப்பட்டு’ என்பவற்றிலும் ’பட்டு’ வருகிறது. ஆக இதெல்லாம் இடம்பெறக்கூடாதா என்பது தான் என்னுடைய கேள்வி. ஆக, இதையெல்லாம் உணர்த்தக்கூடிய வகையில், சபாநாயகரின் அந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில், எங்கள் கண்டனத்தை தெரிவித்து, சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்.

கேள்வி: சபாநாயகர் தெரிவிக்கும்போது ’ஆட்சிகள் மாறும், நிர்வாகம் மாறாது, நிர்வாகிகள் என்பவர்கள் அதிகாரிகள் தான்’ என்று விளக்கம் கொடுத்து இருக்கிறாரே? அதோடு, அகராதியிலேயே ’பட்டுப்போய்’ என்பதற்கு ’செத்துப்போவதற்கு சமம்’ என்று இருப்பதாகவும் தெரிவிக்கின்றாரே?

பதில்: நிர்வாகம் மாறாது, ஆட்சிகள் தான் மாறும் என்று சொல்கிறீர்கள் அல்லவா? அப்படியெனில், நிர்வாகத்தில் உள்ள தவறுகளை எடுத்துச் சொல்லக்கூடாதா? சுட்டிக்காட்டக்கூடாதா? தவறுகள் நடந்திருக்கிறது, பிரச்னைகள் உள்ளன, குறைகள் இருக்கிறது, குற்றச்சாட்டுகள் இருக்கிறது, அதைத்தானே நாங்கள் சொல்கிறோம்.

கேள்வி: பதிலுரையை புறக்கணிக்கின்றீர்களா?

பதில்: இல்லை. நாங்கள் எங்களுடைய சட்டமன்ற ஜனநாயக கடமை மற்றும் மக்களுக்கு தொண்டாற்றக்கூடிய மரபில் இருந்து என்றைக்கும் பின்வாங்க மாட்டோம். கேள்வி நேரத்தின்போது ஜெயலலிதாவை புகழ்ந்து பேசுவது, சசிகலாவை புகழ்ந்து பேசுவது, சின்னம்மா, பெரியம்மா, குட்டிம்மா, என்றெல்லாம் பேசுவது ஆகியவைதான் சட்டப்பேரவையில் நடந்து கொண்டிருக்கிறது. எங்களுடைய கட்சியை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களை எல்லாம் நான் கண்டிப்போடு கூறி இருக்கிறேன், ’கேள்வி நேரத்தில் மட்டுமல்ல, எந்த நேரத்திலும் யாரையும் புகழ்ந்து பேசக்கூடாது, பிரச்னைகளை மட்டும் தான் பேச வேண்டும்’ என்று சொல்லி இருக்கின்றேன். பலமுறை இதை நாங்கள் எடுத்துச் சொல்லியிருக்கிறோம். ஆனால், இந்த சபை அப்படி நடைபெறவில்லை. இருந்தாலும், எங்களைப் பொறுத்தவரையில், எங்கள் ஜனநாயக கடமைகளை ஆற்ற நாங்கள் மீண்டும் சபைக்கு செல்கிறோம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து மீண்டும் அவைக்குள் சென்று தங்கள் பணிகளை தொடர்ந்தனர்.

முன்னதாக, இன்று காலையில் சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது சட்டத்துறை நடவடிக்கைகள் குறித்து திமுக உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா அவர்களின் எழுப்பிய கேள்விக்கு, சட்டத்துறை அமைச்சர் பதில் அளித்தபோது, உறுப்பினரை குற்றம் சாட்டி பேசினார். இந்த விவாதத்தில் பங்கேற்ற திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை:

பேரவைத் தலைவர் அவர்களே,

இங்கு எங்கள் கட்சியின் மாண்புமிகு உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா கேட்ட கேள்விக்கு சம்மந்தப்பட்ட அமைச்சர் பதில் தந்து கொண்டிருக்கிறார். ஆனால் இடையில், ’உறுப்பினர் எதையும் தெரிந்து கொள்ளாமல் வந்து பேசுகிறார்’, என்று ஏதோ எங்கள் உறுப்பினரை குறை சொல்வது போல, குற்றம் சொல்வது போல அவரது பேச்சு அமைந்திருக்கிறது. கேள்வி நேரத்தில் இதுபோன்ற குறைகளை, குற்றங்களை அதுவும் ஒரு உறுப்பினரை சுட்டிக்காட்டிச் சொல்வது என்பது மரபல்ல. எனவே, இது முறைதானா என்பதை எடுத்துச்சொல்லி, அவரது பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு உரையாற்றினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com