நீட் தேர்வு விலக்குக்கான மசோதா: ராமதாஸ், கி.வீரமணி வரவேற்பு

மருத்துவ படிப்புக்கான "நீட்' தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறுவதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதை பாமக நிறுவனர் ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
நீட் தேர்வு விலக்குக்கான மசோதா: ராமதாஸ், கி.வீரமணி வரவேற்பு

மருத்துவ படிப்புக்கான "நீட்' தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறுவதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதை பாமக நிறுவனர் ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் வரவேற்றுள்ளனர். இந்தச் சட்ட மசோதாவை சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கமும் வரவேற்றுள்ளது.
ராமதாஸ்: இந்தியாவிலுள்ள அனைவருக்கும் ஒரே மாதிரியான பாடத் திட்டமும், கல்வியும் வழங்கப்படாத நிலையில், ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு நடத்தப்படக் கூடாது. அந்த வகையில் இந்தச் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது சரியான நடவடிக்கை. பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்ற பிறகே இதனை நடைமுறைப்படுத்த இயலும். எனவே, அதற்கான நடவடிக்கைகளையும் தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும்.
கி.வீரமணி: நீட் தேர்வின் காரணமாக இந்த ஆண்டு தங்கள் பிள்ளைகளை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பவிருந்த கிராமப்புற பெற்றோர் மிகுந்த கவலையுடன் இருந்தனர். இந்த நிலையில், நீட் தேர்வு தமிழ்நாட்டுக்குத் தேவையில்லை என்ற சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமூக நீதிக் களத்தில் இது ஒரு சாதனை மைல்கல்.
டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்: தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ் மற்றும் முதுநிலை இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றுக்கு மத்திய அரசின் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழக அரசின் உரிமை காக்கப்படும். இந்தச் சட்டங்களுக்கு உடனடியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
மேலும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டி.எம்., எம்.சிஎச் உள்ளிட்ட உயர் மருத்துவ சிறப்பு இடங்களுக்கும் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற தமிழக அரசு சட்டம் கொண்டுவர வேண்டும். மேலும், எக்ஸிட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com