நீட் தேர்வுக்கு எதிராக பேரவையில் மசோதா தாக்கல்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மாணவர் சேர்க்கையில் வரும் கல்வியாண்டில் நுழைவுத் தேர்வு இல்லாமல், பழைய நடைமுறையே தொடர வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா பேரவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
நீட் தேர்வுக்கு எதிராக பேரவையில் மசோதா தாக்கல்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மாணவர் சேர்க்கையில் வரும் கல்வியாண்டில் நுழைவுத் தேர்வு இல்லாமல், பழைய நடைமுறையே தொடர வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா பேரவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவை சுகாதாரம் -குடும்ப நலத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார். இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:
மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பிளஸ் 2 தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது இளநிலை பட்டப்படிப்பு, முதுநிலை படிப்புக்கு அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் மற்றும் பல் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் ஒரே சீரான நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசு சட்டத்திருத்தம் செய்துள்ளது.
தமிழகத்தில் ஒரே சீரான நுழைவுத் தேர்வை எழுதக்கூடிய மாணவர்களில் பெரும்பாலோர் கிராமப்புறங்களில் இருக்கிறார்கள். இந்தத் தேர்வுக்காக அவர்கள் தங்களைத் தயார்படுத்தி கொள்வதற்கான பயிற்சி மையங்கள் இல்லாமல் உள்ளன. எனவே அதற்கான வசதியைப் பெற முடியாமல் இருக்கிறார்கள். கிராமப்புற மாணவர்கள் பொருளாதாரத்தில் போதுமான வசதியின்றி பின்தங்கிய நிலையில் உள்ளனர்.
பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரே சீரான நுழைவுத் தேர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் சிறப்பான எதிர்காலத்துக்கு, பிளஸ் 2 பொதுத் தேர்வு முக்கிய நிகழ்வாக உள்ளது.
சுமையாக இருக்கும்: இதன் அடிப்படையில் பார்க்கும்போது மாணவர்களுக்கு ஒரே சீரான நுழைவுத்தேர்வு ஒரு சுமையாக உள்ளது. உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி படிப்புக்கான சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வை ஏற்பதென்பது அதிகப்படியான சுமையாகும். மேலும் ஒரே சீரான நுழைவுத் தேர்வு என்பது மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.,) பிளஸ் 2 பாடத்திட்டத்தின் அடிப்படையில் இருக்கிறது. தமிழகமானது, சிபிஎஸ்இ பாடத் திட்டத்திலிருந்து வேறுபட்டிருக்கிறது.
எனவே மாணவர்களின் சிரமங்களை குறைக்கும் வகையில், மருத்துவம், பல் மருத்துவ இளநிலைப் படிப்புக்கான சேர்க்கையில், பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலான தற்போதைய நடைமுறையே தொடர வேண்டும் என்ற கொள்கை முடிவை அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி இந்த நோக்கத்துக்காக சட்டமொன்றைக் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது என்று அந்த சட்டத் திருத்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று நிறைவேறும்: இந்த சட்டத்திருத்த மசோதா, சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளான புதன்கிழமை (பிப்.1) விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த மசோதா எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com