பன்றிக் காய்ச்சல்: மேலும் சிலர் சாவு, பலருக்கு பாதிப்பு

திருச்சி அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டிருந்த இருவர் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர். மேலும் 4 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

திருச்சி அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டிருந்த இருவர் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர். மேலும் 4 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பன்றிக் காய்ச்சல் குறித்த அறிகுறியுடன் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கடந்த சில நாள்களில் சிலர் இறந்தனர்.
இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை அடுத்த ஆத்தங்கரை விடுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் சுரேஷ் (28). தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 4 நாள்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த இவர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். அங்கு அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ், திங்கள்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார்.
திருச்சி வரகனேரி பகுதியைச் சேர்ந்த சண்முகம் (63). கடந்த 3 நாள்களாக காய்ச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்த இவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு இவருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் 2 நாள்களுக்கு முன் அனுமதிக்கப்பட்ட, சண்முகம், செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தார்.
திருச்சி அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே, புதுக்கோட்டை அரிமளம் பகுதியைச் சேர்ந்த ஜனனி (7) என்ற சிறுமியும், திருச்சி சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த பிரிதர்ஷினி (21) என்ற இளம்பெண்ணும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் அண்மையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ள திருவெறும்பூரைச் சேர்ந்த விஷ்வா என்ற 11 மாதக் குழந்தை, நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த அபினேஷ் (8), புதுக்கோட்டை மாவட்டம், இலுபூர் பகுதியைச் சேரந்த ஐயப்பன், திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த தனுஷ்ஸ்ரீ (4) ஆகிய 4 பேருக்கும் பிரத்யேக வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேலம் குழந்தை கோவையில் இறப்பு: சேலம் அம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சாய் ரக்ஷன் என்ற ஒன்றரை வயது குழந்தை, பன்றிக் காய்ச்சல் காரணமாக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு இறந்தது.
ஆலங்குடியில் இளைஞர் சாவு: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள ஆத்தங்கரை விடுதியைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சுரேஷ் (31). தனியார் காப்பீட்டு நிறுவன ஊழியரான இவருக்கு, கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவருக்கு, பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுரேஷ் செவ்வாய்க்கிழமை அதிகாலை இறந்தார்.
கோவையில் மேலும் 6 பேருக்கு பாதிப்பு: கோவை, கணபதியைச் சேர்ந்த சிவசக்தி (35), காரமடையைச் சேர்ந்த ஜெயராமன் (67), பழனிசாமி (58) ஆகியோர் பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்காக, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, செல்வபுரத்தைச் சேர்ந்த சாய்ரா பானு (57), மூச்சுத் திணறல், வயிற்றுப் போக்கு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
டெங்கு பாதிப்பு: கோவை, பாலுசாமி நாயுடு வீதியைச் சேர்ந்த கார்த்திகா (24), உக்கடத்தைச் சேர்ந்த அரீபா (28), புளியம்பட்டி, கணேசபுரத்தைச் சேர்ந்த எஸ்.பவிராசு (8), திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த ரஞ்சனி (25), திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த செüந்தரராஜன் (13) ஆகியோர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக கோவை, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீவிர காய்ச்சல் காரணமாக, கோவை, கணுவாய் பகுதியைச் சேர்ந்த லக்ஷிதா (5 மாதம்), கரும்புக்கடையைச் சேர்ந்த முகமது அக்குவாஸ் (5), கிணத்துக்கடவைச் சேர்ந்த ஸ்ரீதர்ஷன் (4), திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சர்வேஷ் (1), தௌப்பியா (12) ஆகியோர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
சேலத்தில் குழந்தை அனுமதி: ஈரோடு மாவட்டம், வீரப்பன் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு கடந்த சில நாள்களாக மூச்சுத் திணறல் மற்றும் தொடர் காய்ச்சல் இருந்து வந்தது.
இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அக்குழந்தைக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்தக் குழந்தை ஈரோடு அரசு மருத்துவமனையிலும், தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com