மணப்பாறை அருகே கிணற்றில் விழுந்த காட்டெருமைகள் மீட்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கிணற்றில் விழுந்த 3 காட்டெருமைகளை வனத்துறையினர் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.
கிணற்றிலிருந்து கிரேன் உதவியுடன் மீட்கப்படும் காட்டெருமைகள்.
கிணற்றிலிருந்து கிரேன் உதவியுடன் மீட்கப்படும் காட்டெருமைகள்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கிணற்றில் விழுந்த 3 காட்டெருமைகளை வனத்துறையினர் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.

மணப்பாறை அருகே புத்தாநத்தம் கோசிப்பட்டி பகுதிக்கு அருகே உள்ள கொசவமலையிலிருந்து உணவு தேடி பெண் காட்டெருமை ஒன்று, கடந்த 28ஆம் தேதி இரவு கிராமத்துக்குள் புகுந்தது. அப்போது கோசிப்பட்டியைச் சேர்ந்த மதியழகன் (35) என்பவரது விவசாய நிலத்தில் உள்ள தண்ணீரில்லாத 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது. கிணற்றில் சிக்கியிருந்த காட்டெருமையின் சப்தம் கேட்டு, மலையிலிருந்து அங்கு வந்த காட்டெருமையின் கன்றும், ஆண் காட்டெருமையும் அதே கிணற்றில் விழுந்தன.
இதையடுத்து, கிணற்றிலிருந்து காட்டெருமைகளை மீட்க தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். எனினும், காட்டெருமைகள் ஆக்ரோஷமாக இருந்ததால், மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, அவற்றுக்கு மயக்க ஊசி செலுத்தி மீட்க வனத்துறையினர் முடிவெடுத்தனர். இதற்காக மாவட்ட வன அலுவலர் என். சதீஷ், கோவை ஆனைமலை புலிகள் காப்பக அதிகாரிகளுக்கும், மருத்துவக் குழுவினருக்கும் தகவல் தெரிவித்தார்.
கோவை வனக் கால்நடை மருத்துவ அலுவலர் மனோகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், கிணற்றின் உள்பகுதியில் உள்ள திட்டில் இறங்கி, அங்கிருந்து துப்பாக்கி மூலம் காட்டெருமைகள் மீது மயக்க மருந்தை செலுத்தினார். இதனால் மயங்கிய காட்டெருமைகளை, வனத்துறை, தீயணைப்புத் துறையினர் கால்களை கயிறாலும், கண்களை துணியாலும் கட்டி கிரேன் உதவியுடன் பாதுகாப்புடன் மீட்டனர். மீட்கப்பட்ட காட்டெருமைகள் பின்னர் காட்டில் விடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com