"மக்கள் இயக்கமாக நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் திட்டம்'

நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் திட்டம் மாபெரும் மக்கள் இயக்கமாகச் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் திட்டம் மாபெரும் மக்கள் இயக்கமாகச் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து, அவர் பேசியது:-
நீர்வள ஆதாரத்தைப் பெருக்குவது மிகவும் முதன்மையான பணி. இதனால், நீர் ஆதாரங்களைப் பராமரித்து, நீரை முறையாக சேமித்து வைத்தால், கடும் வறட்சியையும் எளிதில் எதிர்கொள்ள முடியும்.
நீர் ஆதாரங்களை மக்கள் பங்களிப்புடன் பாதுகாத்து வந்த முறைதான் குடிமராமத்து முறை. இது காலப்போக்கில் மறைந்து, அரசே செய்ய நேரிட்டது. இதனால் இந்த நீர் ஆதாரங்களின் பராமரிப்பில், மக்களின் ஈடுபாடு குறைந்து விட்டது. இதையடுத்துதான் குடிமராமத்து திட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பொதுமக்கள், உள்ளூர் அமைப்புகள், பாசன அமைப்புகள் 10 சதவீத பங்களிப்பை பொருளாகவோ அல்லது மனித ஆற்றலாகவோ வழங்க முன்வந்தால், ரூ.10 லட்சம் வரையான திட்டப்பணிகளுக்கு, நிதி உதவி வழங்கி, அவர்களே அப்பணியைச் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
ஆறுகளை சுத்தம் செய்தல், குளங்களைச் சீரமைத்தல், கால்வாய்களைச் சீரமைத்தல் போன்ற பல்வேறு நீர்நிலைகளை இந்தத் திட்டத்தால் சீரமைக்கலாம்.
ரூ.100 கோடி ஒதுக்கீடு: இந்தத் திட்டத்தினைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புவோர் மாவட்ட ஆட்சியரை அணுகி செயல்படுத்தலாம்.
இந்த ஆண்டு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு, திட்டப் பணிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. திட்டப் பணிகள் அனைத்தும் மார்ச் மாதத்தில் இறுதிக்
குள் ஒரே நாளில் தொடங்கப்படும்.
அடுத்த ஆண்டு ரூ.300 கோடி: இதற்கான நிதி அடுத்த ஆண்டு ரூ.300 கோடியாக உயர்த்தப்படும். அது படிப்படியாக மேலும் உயர்த்தப்பட்டு, அடுத்த ஓரிரு ஆண்டுகளில், நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் பணிகள், ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாகச் செயல்படுத்தப்படும்.
வறட்சி நிதி கிடைக்கும்: வடகிழக்கு பருவமழை மிகக் குறைவாக பெய்துள்ளதால், அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆகவே, விவசாயிகள் செலுத்த வேண்டிய நிலவரி முழுவதும் தள்ளுபடி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
வறட்சி நிவாரணத்துக்காக மத்திய அரசிடம் இருந்து ரூ.39,565 கோடி கேட்டுள்ளோம். மத்திய குழு ஆய்வு மேற்கொண்டு சென்றுள்ளது. விரைவில் நிதியுதவி கிடைக்கும்.
64 புதிய கல்லூரிகள்: உயர்கல்விக்கு தமிழக அரசு உரிய முக்கியத்துவம் அளித்து வருகிறது. கடந்த ஐந்தரை ஆண்டுகளில் 64 புதிய கல்லூரிகள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன. உயர் கல்வியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com