முற்றிலும் முடங்கிய தமிழக ரயில்வே திட்டங்கள்!

பல்வேறு காரணங்களால், கடந்த சில ஆண்டுகளாக முடங்கியிருக்கும் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு இந்தாண்டும் உயிர்பெறவில்லை.

பல்வேறு காரணங்களால், கடந்த சில ஆண்டுகளாக முடங்கியிருக்கும் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு இந்தாண்டும் உயிர்பெறவில்லை.

சென்னை புறநகர் ரயில் சேவை திட்டங்கள் குறித்து எந்தவிதமான அறிவிப்போ அல்லது நிதி ஒதுக்கீடோ 2016-17-ஆம் ஆண்டுக்கான ரயில்வே நிதிநிலை அறிக்கையிலும் அறிவிக்கப்படவில்லை; இப்போதைய நிதி நிலை அறிக்கையிலும் இடம்பெறவில்லை.
புறநகர் ரயில்வே திட்டங்களின் நிலை? சென்னையில் புறநகர் ரயில் திட்டங்களுக்காக கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட நிதியே இந்த முறையும் தொடர்கிறது. இதனால் பல ஆண்டுகளாக மெதுவாக நடைபெறும் திட்டங்கள் முடங்கிப் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் ரூ.19,500 கோடியில் செயல்படுத்த திட்டமிட்டிருந்த 14 ரயில்வே திட்டங்கள் உள்பட மொத்தம் 160 திட்டங்களை ரத்து செய்ய ரயில்வே துறை 2014-15-ஆம் ஆண்டில் உத்தரவிடப்பட்டது.
அரசியல் கட்சிகளின் நிர்பந்தங்கள் காரணமாகவே நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் போதிய நிதி ஆதாரங்கள் இல்லாததால், ரத்து செய்யப்படுவதாக அப்போது கூறப்பட்டது.
ரத்து செய்யப்படும் திட்டங்களில் சென்னை கடற்கரை - கொருக்குப்பேட்டை 3-ஆவது ரயில் பாதை திட்டம், அத்திப்பட்டு- புத்தூர் 88.3 கி.மீ. திட்டம், சென்னை கடற்கரை - அத்திப்பட்டு 21 கி.மீ. 4-ஆவது ரயில் பாதை திட்டம் ஆகியவையாகும்.
காரணம் என்ன? அறிவிக்கப்பட்ட திட்டங்களின் பணிகள் பல ஆண்டுகளாகத் தொடங்கப்படவில்லை என்று காரணம் கூறி அந்தத் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சில திட்டங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கியுள்ளன. இதற்கு நிதிப் பற்றாக்குறை, ஒப்பந்தப் புள்ளி சிக்கல்கள், நிலங்களைக் கையகப்படுத்துவது தொடர்பாக நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகளாகும். இதனை தமிழக அரசுடன் இணைந்து நிறைவேற்ற ரயில்வே துறை முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
எழும்பூர் இரு வழிப்பாதை திட்டத்தின் நிலை ? சென்னை எழும்பூரிலிருந்து தினமும் செல்லும் 23 ரயில்களில் தென் மாவட்டங்களுக்கு 80 ஆயிரம் பேர் பயணிக்கிறார்கள்.
இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டால், தினமும் 60 ரயில்கள் வரை இயக்க முடியும். மேலும் லட்சம் பேர் பயணிக்கலாம்.
இருப்பினும், சென்னை-கன்னியாகுமரி இரு வழிப்பாதைப் பணி 10 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
இந்தத் திட்டத்தில், மதுரையிலிருந்து கன்னியாகுமரி, திருவனந்தபுரம் வரை மின்மயப்படுத்தப்பட்ட இருவழிப் பாதை அமைக்கவும் திட்டம் உருவாக்கப்பட்டது.
அதற்கான சர்வே முடிந்து, ரூ.1,916 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இப்போது அதன் நிலை என்னவென்று தெரியவில்லை. இதற்கும் நிதி ஒதுக்கப்படவில்லை.
கானல் நீரான ராயபுரம் முனையமாக்கும் திட்டம்: ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக மாற்ற எவ்வித முயற்சியும் 2017 - 2018 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. கடந்தாண்டும் நிதி ஒதுக்ககப்படாமல் இதே நிலை நீடித்தது.
ஆனால் இரண்டு ஆண்டுக்கு முன்பு சிறப்பு திட்டத்தின் கீழ் ராயபுரம் ரயில் முனையமாக்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு, நடைமேடைகளை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வந்தது.
இப்போது அந்தப் பணியும் நடைபெறவில்லை. மேலும், சில நடைமுறை சிக்கல்கள் காரணமாக ராயபுரம் முனையமாக்கும் பணி கைவிடப்பட்டு.
தண்டையார்பேட்டை ரயில் முனையமாக்குவதற்கான ஆய்வுப் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் நடத்தப்பட்டு அதுவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு ரூ 2,287 கோடி நிதி ஒதுக்கீடு !

ரும் நிதியாண்டுக்கான (2017-18) மத்திய அரசின் பொது நிதி நிலை அறிக்கையில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ 2,287 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016-17-ஆம் ஆண்டு தமிழகத்துக்கு ரூ 2064 கோடி ஒதுக்கப்பட்டது. இந்தாண்டுக்கான ஒதுக்கீட்டில் கடந்தாண்டைவிட கூடுதலாக ரூ.223 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கேரளாவுக்கு 2017-18-ஆம் ஆண்டுக்கான ரயில்வே பணிகளை மேற்கொள்ள ரூ. 1206 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
2015-16-ஆம் ஆண்டு ரயில்வே நிதி நிலை அறிக்கையில் தமிழகத்துக்கு ரூ.2,042 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் புதிய ரயில்வே திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. அதேபோலதான் 2017-18 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு அதிகப்படியான நிதி ஒதுக்கப்பட்டாலும் புதிய திட்டங்கள் ஏதும் இல்லை. இது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரயில்வே நிதி எவ்வளவு ?
2009-10 ரூ. 614.2 கோடி
2010-11 ரூ. 870 கோடி
2011-12 ரூ. 1,250 கோடி
2012-13 ரூ. 736 கோடி
2013-14 ரூ. 922 கோடி
2014-15 ரூ. 858 கோடி
2015-16 ரூ. 2,042 கோடி
2016 -17 ரூ. 2,064 கோடி
2017 -18 ரூ. 2,287 கோடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com