ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு முன்பும்... பின்பும்... தனி கவனம் பெறுகிறாரா முதல்வர்

தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு, ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் நிறைவேற்றிய பிறகு ஒரு படி உயர்ந்திருப்பதை மக்கள் உணர்ந்து வருகிறார்கள்.
ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு முன்பும்... பின்பும்... தனி கவனம் பெறுகிறாரா முதல்வர்


சென்னை: தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு, ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் நிறைவேற்றிய பிறகு ஒரு படி உயர்ந்திருப்பதை மக்கள் உணர்ந்து வருகிறார்கள்.

முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக மரணம் அடைந்ததை அடுத்து, ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார்.

அதன்பிறகு, தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்ட சோதனை உள்ளிட்ட சம்பவங்களால் அவரது செயல்பாடு குறித்து கேள்விகளும், விமரிசனங்களும் எழுந்தன.

ஆனால், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை அடுத்து, புது தில்லி சென்று, அவசரச் சட்டம் நிறைவேற்றி, அதை அரசிதழில் வெளியிட்டு வெற்றி கண்டிருக்கிறார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.

கட்சியைப் பொருத்தவரை பன்னீர்செல்வம் முன்னிலைப்படுத்தப்படுவது இல்லை என்றாலும், அவர் அதைப் பெரிதாகக் காட்டிக் கொள்வதில்லை.

எப்போதும் போல சிரித்த முகத்துடன் கட்சி தொடர்பான விழாக்களில் கலந்து கொள்ளும் பன்னீர்செல்வம், 3வது மட்டும் அல்ல இறுதி வரிசையில் அமர வைக்கப்பட்டாலும் அதிருப்தியை வெளிக்காட்டியதில்லை.

ஆனால், மக்களிடையே அவருக்கு ஒரு கரிசனத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று தான் கட்சித் தரப்பு எண்ணுகிறது. சில ஊடகங்களும், அவர் இடம்பெறும் புகைப்படங்களை வட்டம் போட்டு காட்டி அவருக்கான இடம் குறித்து செய்திகளைப் போட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

அதே சமயம், தற்போது அந்த விஷயத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ள கட்சித் தலைமை சிறிது மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாவின் 48வது நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்ற அதிமுக பொதுச் செயலர் சசிகலா, தன்னுடன் வந்திருந்த முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை முன் வரிசைக்கு அழைத்து, இருவரும் சேர்ந்து மலர் வளையம் வைத்தனர்.

பிறகும் மலர் தூவி மரியாதை செலுத்தும் போதும், அதிமுக எம்.பி.யும், வழக்கமாக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிராக பேசி வருபவருமான தம்பிதுரையும் சிறிது மாற்றத்தை காண்பித்தார். பன்னீர்செல்வத்தை முன்னே வருமாறு அழைத்து, நிற்கச் செய்தார். என்றாலும் பன்னீர்செல்வம் அப்போதும் ஓடோடி வந்து முன் வரிசையில் இடம் பிடிக்காமல், தனக்கான இடம் மக்களிடையே கிடைத்து வருகிறது என்ற மகிழ்ச்சியோடு, அதே சலனமற்ற முகத்தோடு நின்றிருந்ததை சில புகைப்படக் கலைஞர்கள் கிளிக் செய்ய மறக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com