நடா புயலில் சிக்கிய சம்பவம்: படகுடன் அந்தமான் திரும்ப முடியாமல் தவிக்கும் மீனவர்

நடா புயலில் சிக்கி இலங்கை சென்றடைந்து, பின்னர் காரைக்கால் வந்து சேர்ந்த அந்தமான் மீனவர், தமது படகு என்ஜினை சரிசெய்ய நிதியில்லாமல் காரைக்காலில் தவித்துவருகிறார்.

நடா புயலில் சிக்கி இலங்கை சென்றடைந்து, பின்னர் காரைக்கால் வந்து சேர்ந்த அந்தமான் மீனவர், தமது படகு என்ஜினை சரிசெய்ய நிதியில்லாமல் காரைக்காலில் தவித்துவருகிறார்.

அந்தமானிலிருந்து முகம்மது நிசார் உள்ளிட்ட 6 பேர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27-ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கப் புறப்பட்டனர்.

அந்தமானின் வடக்குப் பகுதியில் உள்ள சென்டினல் தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, நடா புயலின் தாக்கத்தால், என்ஜின் பழுதாகி, சுமார் ஒரு மாத காலம் கடலிலேயே தத்தளித்து பின்னர் இலங்கை கரையைச் சென்றடைந்தனர்.

இலங்கை அரசால் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கப்பட்ட மீனவர்களை, இந்திய கடலோரக் காவல்படையினர் கடந்த ஜன.10-ஆம் தேதி காரைக்கால் கொண்டுவந்துவிட்டனர். படகின் என்ஜின் பழுதால், காரைக்கால் அரசலாற்றில் படகை நிறுத்திவிட்டு, அனைவரும் குடும்பத்தினரை பார்க்க அந்தமான் சென்றனர்.

கடந்த 5 நாள்களுக்கு முன்பு படகு உரிமையாளர் முகம்மது நிசார் காரைக்கால் வந்தார். படகு என்ஜினை சீர்செய்ய ரூ.1 லட்சம் என தெரியவந்ததும், போதிய நிதியில்லாமல் தவித்துவருகிறார்.

இதுகுறித்து அவர் வியாழக்கிழமை கூறியது: அந்தமானில் பழைய படகை ரூ.5 லட்சத்துக்கு வாங்கி பயன்படுத்தத் தொடங்கி சில மாதத்திலேயே இந்த நிலை ஏற்பட்டுவிட்டது. தற்போது என்ஜின் பழுது நீக்க ரூ.1 லட்சம் செலவாகும் என கூறுகிறார்கள். அதற்கான நிதி தம்மிடம் இல்லை. படகை விலைக்கு விற்கலாம் என்றாலும், மிகக் குறைவான விலையிலேயே கேட்கிறார்கள்.

இந்த நிலை குறித்து அந்தமான் துணை நிலை ஆளுநருக்கும் மனு கொடுத்திருக்கிறேன். அந்தமான் நிர்வாகமோ, மத்திய அரசோ, இயற்கை சீற்றத்தால் பாதித்த எனக்கு ஆதரவு தருவதற்கு முன்வரவில்லை.

படகு என்ஜினை சரிசெய்து உதவ யாரேனும் முன்வந்தால், படகை அந்தமானுக்கு கொண்டு சென்று அடுத்தகட்ட ஏற்பாடுகளைச் செய்வேன். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு காரைக்காலில் முடங்கிக் கிடப்பதாக அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com